”ஒருபக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன்” - தவெகவுக்கு ஆர்.எஸ். பாரதி சவால்!
ஆர்.கே. நகரில் நேற்று தவெகவின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பொதுப்பணித்துறை ஆதவ் அர்ஜுனா, ”நாங்கள் இதுவரை அரசு விழாக்களில், கட்சியை பார்த்தது கிடையாது. ஆனால், மேயர் பிரியா, நமது சகோதரி பல்லவியை, ஒரு மெழுகுவர்த்தியை கூட கொடுக்காமல் அவமானப்படுத்தியிருக்கிறார். இப்போது, உதயநிதிக்கு நேருக்கு நேர் ஒரு சவால் விடுகிறேன். இன்னும் 8 மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் வர விருக்கிறது. 75 வருட திமுகவாக இருந்தால், 25-ல் 1 மேயர் இடத்தையாவது வென்று காட்டுங்கள். எங்களுடைய பல்லவி சகோதரி எப்போது அவமானப்படுத்தப்பட்டார்களோ, அப்போதே நாங்கள் தேர்தல் வேலையை ஆரம்பித்துவிட்டோம்” என சவால் விடுத்திருந்தார்.
இந்தசூழலில் தான், அமைச்சரின் ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு திமுகவை சார்ந்த பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர். குறிப்பாக, முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, ”உள்ளாட்சித் தேர்தலில் புதியவர்கள் ( தவெக) யாரும் வருவதற்கு வாய்ப்பு இல்லை. மீண்டும் திமுக தான் வரும்” எனத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்துள்ள திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உள்ளாட்சித் தேர்தலில் 1 மேயர் இடத்திலாவது தவெக வென்றால், தனது ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன் என சவால் விடுத்திருக்கிறார். இதுகுறித்து அவர் பேசுகையில், ”ஆதவ் அர்ஜுனாவுக்கு திமுகவின் வரலாறு தெரியாது. 76 ஆண்டுகால திமுக வரலாற்றில் இவரைப் போன்ற பல பேரை நாங்கள் பார்த்துள்ளோம். அவர்களெல்லாம் இன்று இல்லை. ரொம்ப வேகமாக பேசினால் மக்கள் அதற்கு திரும்ப பதில் அடி கொடுப்பார்கள் இதுதான் தமிழகத்தின் வரலாறு; இதை ஆதவ் அர்ஜுனா புரிந்து கொள்ள வேண்டும்.
நேற்று உள்ளாட்சித் தேர்தலில் ஒரு இடத்தில் வர முடியுமா என்று ஆதவ் அர்ஜுனா சவால் விடுகிறார். அடிமடையனுக்கு கூட தெரியும் 1984 தேர்தல் குறித்து. 1984 தேர்தலுக்கு பின்னர் 1986 உள்ளாட்சி தேர்தலில் 102 நகராட்சியில் 90 நகராட்சியில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. திமுக தோன்றிய காலத்தில் இருந்து பல தோல்விகளை கண்டுள்ளோம்; எங்களைப் போல வெற்றி பெற்றவர்களும் கிடையாது. எம்ஜிஆரை விட பெரிய தலைவர்கள் விஜயும் அல்ல மற்றவர்களும் அல்ல. முடிந்தால் ஆறு மாதத்தில் உள்ளாட்சித் தேர்தலை வையுங்கள், ஒரு மேயர் இடத்திலாவது தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றால் நான் ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன். இந்த சவாலை ஏற்க தமிழக வெற்றி கழகம் தயாரா..?
1957 ல் இருந்து இதுவரையில் திமுகவுக்கு என்று ஒரு தனிப்பட்ட செல்வாக்க உள்ளது. அது எந்த காலத்திலும் குறைந்தது கிடையாது. இவ்வளவு பேர் அணி மாறுகிறார்களே.. திமுகவில் இருந்து யாராவது அணி மாறி உள்ளனரா? திமுக தொண்டர்கள் எங்கும் செல்ல மாட்டார்கள். அதேபோல, ஸ்டாலினுக்கோ உதயநிதி ஸ்டாலினுக்கோ சவால் விடுகிற தகுதி ஆதவ் அர்ஜுனாவுக்கு இல்லை. விஜய்க்கு ஒரு ஆபத்து வரப்போகிறது என்றால் அதற்கு காரணம் ஆதவ் அர்ஜுனா தான்” எனத் தெரிவித்துள்ளார்.

