வேட்புமனுத் தாக்கல் Pt web
தமிழ்நாடு

ஸ்டாலின் vs விஜய்.. ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்.. பேசியது என்ன?

திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் 4-வது முறையாக போட்டியிடவுள்ள நிலையில், இன்று வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கிறார். அதேபோல, தவெக தலைவர் விஜயும் பெரம்பூர் தொகுதி வேட்பாளராக இன்று வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கிறார்.

Premkumar S

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கின்றன. 5.73 கோடி வாக்களர்கள் வாக்களிக்கவிருக்கும் இத்தேர்தலுக்கான வேட்மனுத்தாக்கல் இன்று தொடங்கியிருக்கிறது. தமிழ்நாட்டை 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வரும் திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி மற்றும் முதன்முறையாக தேர்தலை சந்திக்கவிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் ஆகியவை களத்தில் உள்ள இச்சூழலில் தான், தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது.

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்

திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே மட்டும் தான் போட்டி என ஒவ்வொரு கூட்டங்களிலும் கூறிவரும் தவெக தலைவர் விஜயின் அரசியல் வருகை 2026 தேர்தலில் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்திருக்கிறது. தவெக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்நிலையில் தான், வேட்புமனுத் தாக்கலின் முதல் நாளான இன்று பெரம்பூர் தொகுதி, வியாசர்பாடியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் அலுவலர் கீதாவிடம் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார் விஜய். திருச்சி கிழக்கில் ஏப்ரல் 2-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்வார் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.

அதேபோல ஒரே சமயத்தில், கொளத்தூர் தொகுதியில் 4-வது முறையாக கொளத்தூர் தொகுதியில் களம் காணவிருக்கும் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், தேர்தல் நடத்தும் அதிகாரி எஸ். சாந்தியிடம் வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கிறார். இரு கட்சிகளின் முதல்வர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் தவெக தலைவர் விஜய் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

ஸ்டாலின்

வேட்புமனுத் தாக்கலுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “திமுக மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அமோகமான வாக்கு வித்தியாசத்தில் மக்கள் வெற்றி பெற வைப்பார்கள். முன்னதாக, 3 மூன்று முறை கொளத்தூரில் இருந்ததைவிட 4 வது முறை அதிகளவிலான ஆதரவு இருக்கிறது” எனத் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து, நாளை முதல் முதல்வர் ஸ்டாலின் பரப்புரை தொடங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேசமயம், வேட்புமனுவைத் தாக்கச் செய்த கையோடு இன்று தவெக தலைவர் விஜய் பரப்புரையைத் தொடங்கியிருக்கிறார். அதன்படி, பெரம்பூரில் நடைபெற்ற பரப்புரையில் பேசிய அவர், ”5 ஆண்டுகளாக ஆட்சியை நடத்தி மக்களை இந்த நிலைக்கு கொண்டு வந்ததற்கு தீயசக்தி திமுக தான் காரணம். திமுக கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு அவர்களது காதில் விசில் ஊதி அனுப்புங்கள்” எனத் தெரிவித்திருக்கிறார்.