Thiruma Returns to Assembly Polls After 10 Years
திருமாவளவன்web

சட்டமன்றத் தேர்தலுக்கு மீண்டும் திரும்பிய திருமா.. 10 ஆண்டுகளுக்குப் பின் போட்டி.. பின்னணி என்ன?

மக்களவை உறுப்பினராக பதிவி வகிக்கும் திருமாவளவன், காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு போட்டியிடுவதும், தேசிய அரசியலில் இருந்து மாநில அரசியலுக்கு வருகை தருவதன் பின்னணியும் என்ன?
Published on
Summary

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணிக் கட்சியான விசிக, 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த நிலையில், 3 சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதும், 10 ஆண்டுகளுக்குப் பிறகு தொல். திருமாவளவன் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் களமிறங்குவது, அவர் தேசிய அரசியலிலிருந்து மாநில அரசியலுக்கு கவனம் செலுத்துகிறாரா என்ற கேள்வியை தீவிரப்படுத்துகிறது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. இந்த நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக போட்டியிடும் 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார். அதில் தற்போது சிட்டிங் எம்.எல்.ஏக்களாக உள்ள எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், பனையூர் பாபு ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது பல்வேறு கேள்விகளுக்கு வழிவகை செய்துள்ள நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டமன்றத் தேர்தலில் திருமாவளவன் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது மேலும் பல்வேறு விவாதங்களுக்கு வழிவகை செய்துள்ளது.

ஆளூர் ஷாநவாஸ்
ஆளூர் ஷாநவாஸ்web

தற்போது சிதம்பரம் தொகுதியின் மக்களவை உறுப்பினராக பதிவி வகிக்கும் திருமாவளவன், காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதும், தேசிய அரசியலில் இருந்து மாநில அரசியலுக்கு வருகை தருவதன் பின்னணி என்ன என்பதையும் அலச வேண்டியுள்ளது.

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றான காட்டுமன்னார்கோவில் தொகுதியில் இருந்தே திருமாவளவனின் அரசியல் எழுச்சி தொடங்கியது. மேலும், இத்தொகுதி விசிகவின் கோட்டையாகவும் கருதப்படுகிறது. அங்கு கணிசமான அளவில் சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின சமூகத்தின் வாக்கு வங்கி உள்ளதுதான் காரணமாக முன்வைக்கப்படுகிறது.

Thirumavalan & MK Stalin
Thirumavalan & MK Stalin web

2001ஆம் ஆண்டில் முதன்முதலில் மங்களூர் தொகுதியில் வென்றாலும், அதன்பின் காட்டுமன்னார்கோவிலில் விசிக வலுவாகத் தடம் பதித்துள்ளது. 2006ஆம் ஆண்டு தேர்தலில் விசிக வேட்பாளர் ரவிக்குமார் இந்த தொகுதியில் வென்றதும், 2021ஆம் ஆண்டு தேர்தலில் சிந்தனை செல்வன் 49.20 சதவிகிதம் வாக்குகளை பெற்று வென்றதும் குறிப்பிடத்தக்கது. மேலும், எம்பியாக உள்ள திருமாவளவன் தனது தொகுதிகளுக்கு செய்த பணிகள், அங்கு மக்களுடன் காட்டும் நெருக்கம் உள்ளிட்டவை வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திருமாவளவனுக்கு வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என்றே பார்க்கப்படுகிறது.

மேலும் திமுக கூட்டணியில் விசிக இருப்பதால் கூட்டணிக் கட்சிகளின் வாக்கு வங்கியும் இணைந்து வெற்றியை எளிதாக்கும் என கணிக்கப்படுகிறது. 2016ஆம் ஆண்டு மக்கள் நலக் கூட்டணியில் விசிக அங்கம் வகித்து தேர்தலைச் சந்தித்தபோது, காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதியில் திருமாவளவன் போட்டியிட்டு வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தார்.

திருமா
திருமா முகநூல்

10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் அதே தொகுதியில் களம் காண்பதும், மக்களவை உறுப்பினராக பதவி வகிக்கும் அதே சமயத்தில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதும், திருமா தேசிய அரசியலில் இருந்து மாநில அரசியலுக்குத் திரும்ப விருப்பப்படுகிறாரா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் விசிக கொள்கை பிடிப்பான கட்சியாக உருவெடுத்து வருகின்ற நேரத்தில் அதனை மேலும் வலுவாக கட்டமைக்க திருமாவளவன் மாநில அரசியலில் போட்டியிடுகிறாரா என்ற பார்வையை கவனிக்கவேண்டியுள்ளது. காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் வெற்றி பெறும் பட்சத்தில் மக்களவை உறுப்பினர் அல்லது சட்டமன்ற உறுப்பினர் ஏதேனும் ஒரு பதவியை ராஜினாமா செய்யவேண்டும், அத்தகைய சூழலில் ஏதேனும் ஒரு பதவிற்கு இடைதேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com