vijay, stalin web
தமிழ்நாடு

”இன்ஸ்டாகிராம் மூலமாகவே ஆட்சி..” - தவெகவை விமர்சித்த ஸ்டாலின்!

சமூக வலைதளங்கள் குறிப்பாக இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது என திருச்சியில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

Premkumar S

தேர்தல் தோல்வியால் திமுக சிதறாது, திமுக திட்டங்களையே புதிய அரசு செயல்படுத்துகிறது, எந்தப் பணியும் செய்யாமல் சமூக ஊடகங்கள் மூலம் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக தேர்தலை சந்தித்த தவெக அதிக எண்ணிக்கையிலான இடங்களில் வெற்றி பெற்றிருந்த நிலையில், காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்து, அக்கட்சியின் தலைவர் விஜய் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றிருக்கிறார்.

தொடர்ச்சியாக 2-வது முறை திமுக தமிழகத்தில் ஆட்சியமைக்கும் என கூறிய பல்வேறு கணிப்புகளும் பொய்த்துப்போய் 59 இடங்களையே பெற்று திமுக 2வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஸ்டாலின் கொளத்தூரிலேயே தோல்வியைச் சந்தித்தது திமுகவிற்கு பெரிய அடியாக பார்க்கப்படுகிறது.

ஸ்டாலின்

இந்தசூழலில் தவெகவின் வெற்றிக்கு சமூக ஊடகங்கள் பெரிய அளவில் உதவியதாக அரசியல் விமர்சகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வரும் வேளையில், திமுகவின் தோல்வி குறித்து ஆராய அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பல்வேறு குழுக்களையும் அமைத்திருக்கிறார். இந்தசூழலில் தான், தேர்தல் முடிவுக்கு பிறகு முதன்முறையாக திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று திருச்சி சென்றார். அங்கு அவருக்கு, திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, திமுக எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணன் இல்லத் திருமண விழாவில் கலந்துகொள்ள அங்கிருந்து சாலை மார்க்கமாக நேற்று தஞ்சாவூர் சென்றடைந்தார்.

இந்த சூழலில் இன்று நடைபெற்ற திருமண விழாவில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான ஸ்டாலின் பேசுகையில், ”தேர்தல் தோல்விகளைக் கண்டு திமுக சிதறாது. திமுகவினர் யாரும் சோகமாக இருக்கத் தேவையில்லை. திமுக கொண்டு வந்த திட்டங்களை தான் தற்போதைய அரசு செயல்படுத்தி வருகிறது. திமுகவின் சாதனைகளை யாராலும் மாற்ற முடியாது. திமுகவின் திட்டங்கள் இருக்கும் வரை நாம்தான் ஆட்சி செய்கிறோம் என்று பொருள். நாம் அனைத்து பணிகளையும் செய்து தோல்வி அடைந்தோம். அவர்கள் எந்த பணியையும் செய்யாமல் வெற்றி பெற்றனர். சோசியல் மீடியா.. குறிப்பாக இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது. ஒரு பீனிக்ஸ் பறவையாக திமுக மீண்டும் எழும்” எனத் தெரிவித்திருக்கிறார்.