சித்திரை திருவிழா pt desk
தமிழ்நாடு

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் சித்திரை திருவிழா - கொடியேற்றத்துடன் தொடங்கியது

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேர் திருவிழா கொடியேற்றம் - ரங்கா ரங்கா என கோஷமிட்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

PT WEB

செய்தியாளர்: வி.சார்லஸ்

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் 11 நாட்கள் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா இன்று காலை கொடி ஏற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. கொடியேற்ற நிகழ்விற்காக அதிகாலை 4.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து வெள்ளி பல்லக்கில் புறப்பட்டு கொடியேற்றம் மண்டபம் வந்தடைந்தார்..

இதையடுத்து கொடி படம் புறப்பட்டு கோயில் வளாகத்தைச் சுற்றி வந்தது. இதைத் தொடர்ந்து தங்கக் கொடி மரத்தில் கொடி படத்திற்கு பட்டர் சுவாமிகள் மற்றும் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர். பின்னர் மீன லக்கனத்தில் காலை 4.30 மணிக்கு மேளதாளம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது அங்கு இருந்த பெரும் திரளான பக்தர்கள் ரெங்கா ரெங்கா என பக்தி பரவசத்துடன் வணங்கி வழிபட்டனர்.

இன்று முதல் அடுத்து வரும் 11 உற்சவ நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை வேளையில் நம்பெருமாள் கற்பக விருட்ச வாகனம், சிம்ம வாகனம், கருட வாகனம், யானை வாகனம், தங்கக் குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகின்ற 26ஆம் தேதி நடைபெற உள்ளது.