சோஹோ நிறுவனத்தின் ஸ்ரீதர் வேம்பு நேற்று அவரது எக்ஸ் தளப் பக்கத்தில், அமெரிக்காவை சேர்ந்த McCullough Foundation என்ற அமைப்பின், ‘தடுப்பூசி போடுவது, ஆட்டிசம் குறைபாட்டுக்கு மிக முக்கிய ஆபத்து காரணியாக உள்ளது’ என்று சொல்வது போன்ற ஆய்வொன்றை பகிர்ந்திருந்தார். தொடர்ந்து, அந்தப் பதிவில், “ பெற்றோர்கள் தான் இங்கு பகிர்ந்த இந்த ஆய்வை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். சிறுகுழந்தைகளுக்கு நாம் அளவுக்கு அதிகமாக தடுப்பூசி கொடுக்கிறோம் என்பதை நிரூபிக்கும் வகையில் இன்னும் பல ஆய்வுகள் இருக்குமென நம்புகிறேன். இந்தியாவிலும் இதுதான் நடக்கிறது, அதிகளவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படுகின்றன. ஆட்டிசம் பாதிப்பும் இந்தியாவில் உயர்ந்த வண்ணமே இருக்கிறது” எனப் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் சோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவின் இந்த கருத்துக்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. அந்த வகையில் ஸ்ரீதர் வேம்புவின் இந்த கருத்தை விமர்சித்து விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு எக்ஸ் தளத்தில் கருத்தொன்றை பதிவு செய்துள்ளார். அதில், ” குழந்தைகளுக்கு அதிகளவு தடுப்பூசிகள் கொடுக்கப்படுவதால் தான் ஆட்டிசம் பாதிப்பு வருகிறது என்று சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கூறியிருக்கிறார். அறிவியலுக்கு எதிரான இவரின் பிற்போக்குத்தனமான கருத்துக்கு மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் தங்களது கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
மூடநம்பிக்கைகளிலும் சடங்குகளிலும் பெரும்பான்மை மக்கள் மூழ்கியுள்ள இந்தியா போன்ற பழமைவாத நாட்டில், தடுப்பூசிகள் அறிவியல் ஆய்வுகள் மூலம் கோடிக்கணக்கான மக்களை நோய் தொற்றுகளிலிருந்து குணமாக்கவும்பாதுகாக்கவும் அரசுகள் போராடி வருகின்றன. இத்தகைய ஆபத்தான பிற்போக்கு கருத்துகள் நோய் தடுப்பு இயக்கத்திற்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தும். பகுத்தறிவும், அறிவியல் மனப்பான்மையும் கொண்ட திராவிட இயக்க தலைவர்கள் தமிழ்நாட்டை வழிநடத்திய காரணத்தினால் தான் இன்று கல்வி, மருத்துவம், சமூக மற்றும் பொருளாதார காரணிகளில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது.
இந்த கும்பலின் நச்சுக்கருத்தை கேட்டு யாரேனும் குழந்தைகளுக்கு அவசியமான தடுப்பூசிகளை செலுத்தத் தவறினால் ஏற்படும் விளைவுகளை நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அறிவியலின் துணையால் கோடிக்கணக்கானோரின் பசிப்பிணி தீர்ந்துள்ளது. நவீன மருத்துவத்தால் நமது குழந்தைகளும் தாய்மார்களும் நலத்துடன் இருக்கின்றனர். உயர் சிகிக்கைகளால் உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன.
ஸ்ரீதர் வேம்பு போன்ற சனாதன பிற்போக்குவாதிகளின் இத்தகைய ஆபத்தான போக்கை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும். அறிவியலுக்கு எதிராக பரப்புரை செய்யும் இம்மாதிரியான ஆசாமிகளை வெகு மக்கள் விரட்டி அடிக்க வேண்டும்” எனவும் கூறியுள்ளார்.