தவெக நிர்வாகக் குழு கூட்டம் |செய்தியாளர்களை சந்தித்த தவெக நிர்வாகிகள்; சொன்னது என்ன?
கரூர் தவெக பரப்புரையில் ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவம் நடந்து ஒரு மாதம் முடிந்துள்ள நிலையில், இன்று தவெக-வின் நிர்வாகக் குழு கூட்டம் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதைனையடுத்து, தவெக இணை பொதுசெயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் மற்றும் தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்துள்ளனர்.
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்கு பிறகு, தவெக தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறது. கடந்த, அக்டோபர் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் கரூரில் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர விடுதிக்கு அழைத்து ஆறுதல் கூறியிருந்தார். தொடர்ந்து, தொடர் மழையால் நெல்மணிகள் வீணாகி வருவதைக் குறிப்பிட்டு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் தான், தவெகவின் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்கு, இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக குழு கூட்டம் சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
மேலும், இந்த நிர்வாகக் குழு கூட்டம் கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தலைமயில் நடைபெற்றது. அக்கூட்டத்தில், கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுன்,இணை பொதுசெயலாளர் சி.டி.ஆர் .நிர்மல்குமார், துணை பொதுச் செயலாளர்கள் ராஜ்மோகன், விஜயலட்சுமி உள்ளிட்ட 28 நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பின்னர், இக்கூட்டத்தில் பங்கேற்ற தவெக இணை பொதுசெயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, இன்று நடந்த நிர்வாகக் குழு கூட்டத்தில் தவெகவின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் பொதுசெயலாளர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க நாங்கள் காத்திருந்தோம் எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. பின்னர், முதல்வர் கரூருக்கு வந்தார். உடனடியாக இறந்தவர்களில் உடல்கள் உடற்கூறாய்வு செய்யப்பட்டன.
எங்கள் முதல் குற்றச்சாட்டு காவல்துறை மீது அதனால் நீதிமன்றத்தில் முறையிட்டோம். மக்கள் அனைவரும் எங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எங்களுக்கான துக்கம் 41 பேர் உயிர் இழந்தது மற்றபடி எங்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தவெக சார்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் 10 நாட்களுக்குள் வழிக்காட்டு நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது. அதன்படி, வழிகாட்டு நெறிமுறைகள் வெளி வந்த பின் விஜய்யின் அடுத்தக்கட்ட சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார்.
தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் பேட்டி:
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தவெக கொள்க பரப்புப் பொதுச்செயலாளர் அருண்ராஜ், ” இரண்டரை மணி நேரம் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கரூர் விவாகரம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் அடுத்த வாரம் நடைபெறவிருக்கிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும்” எனத் தெரிவித்தார்.

