அதிமுகவில், தொடர் பேச்சுவார்த்தைக்கு இரு அணிகளும் தற்போது சமரசமாகியிருப்பதாக அக்கட்சியின் ஐடி விங்க் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்த தவெக, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. அதேசமயம், இத்தேர்தலில் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக படுதோல்வியடைந்தது. குறிப்பாக, எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூடப் பெற அக்கட்சி தவறியது. தோல்வி காரணமாக அக்கட்சியில் உட்கட்சிப் பூசல் நிலவியது. இதனால் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் என ஒரு குழுவாகவும், எடப்பாடி பழனிசாமி ஒரு குழுவாகவும் இயங்கியது. இதற்கிடையே எஸ்.பி.வேலுமணி தரப்பைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏக்களான மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா மற்றும் அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்கள் பதவி விலகல் கடிதத்தை சபாநாயகரிடம் அளித்துவிட்டு, தவெகவில் போய் இணைந்தனர். அதேநேரத்தில், எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் சிலர், மீண்டும் பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதற்கிடையே, அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமியுடன், சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்கள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. எனினும், அவர்களின் கோரிக்கையை அதிமுக பொதுச் செயலர் கே.பழனிசாமி ஏற்க மறுத்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில், தொடர் பேச்சுவார்த்தைக்கு இரு அணிகளும் தற்போது சமரசமாகியிருப்பதாக அதிமுகவின் ஐடி விங்க் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அது வெளியிட்டுள்ள பதிவில், ‘கோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இந்த எஃகு கோட்டையை இனி எவராலும் அசைக்க முடியாது! இனி நமக்குள் பிரிவில்லை... இந்த எஃகு கோட்டையை தகர்க்க இனி எவருக்கும் வழியில்லை.. நம் இலக்கு ஒன்றுதான்... அது கோட்டையில் மீண்டும் நமது இரட்டை இலை கொடி பறப்பது மட்டுமே’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.