உடைந்த அதிமுக.. ஒன்றுசேர முயலும் வேலுமணி தரப்பு.. ஏற்க மறுத்த இபிஎஸ்!
தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிளவுப்பட்டு இருக்கும் நிலையில், நாளுக்கு நாள் பரபரப்பான செய்திகள் வெளியாகி வருகின்றன. இதற்கிடையே, அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமியுடன், எஸ்.பி.வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்கள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்த தவெக, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. அதேசமயம், இத்தேர்தலில் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக படுதோல்வியடைந்தது. குறிப்பாக, எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூடப் பெற அக்கட்சி தவறியது. தோல்வி காரணமாக அக்கட்சியில் உட்கட்சிப் பூசல் நிலவி வருகிறது. இதனால் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் என ஒரு குழுவாகவும், எடப்பாடி பழனிசாமி ஒரு குழுவாகவும் இயங்கி வருகிறது. இதற்கிடையே எஸ்.பி.வேலுமணி தரப்பைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏக்களான மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா மற்றும் அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்கள் பதவி விலகல் கடிதத்தை சபாநாயகரிடம் அளித்துவிட்டு, தவெகவில் சேர்ந்தனர்.
அதேநேரத்தில், எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் சிலர், மீண்டும் பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர். இதற்கிடையே, அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமியுடன், எஸ்.பி.வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்கள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. எனினும், எஸ்.பி.வேலுமணி தரப்பினரின் கோரிக்கையை அதிமுக பொதுச் செயலர் கே.பழனிசாமி ஏற்க மறுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கட்சிப் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பதவி வழங்க வேண்டும் எனவும், கட்சி சார்ந்த முடிவெடுக்க ஒரு குழுவை நியமிக்க வேண்டும் எனவும் வேலுமணி தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது. ஆனால் இதை கே.பழனிசாமி ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. கட்சிக்கு எதிராக கொடுத்த புகார்களை திரும்பப் பெற்றுவிட்டு, இணைந்து செயல்பட பழனிசாமி அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் வேலுமணிக்கும் சண்முகத்துக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

