கர்நாடகா - மஹாராஷ்டிரா மாநில எல்லையில் இருக்கும் பெலகாவியில் கடந்த இரண்டு நாட்களாக, கனமழை பெய்து வருகிறது. பெலகாவியில் உள்ள வேதகங்கா, துாத்கங்கா, மல்லபிரபா ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பெலகாவியில், குசமலி என்ற இடத்தில் மல்லபிரபா ஆற்றின் குறுக்கே புதிதாக பாலம் கட்டும் பணிகள் நடக்கும் நிலையில், வெள்ளத்தில் தற்காலிக தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது.
தரைப்பாலம் இடிந்ததால், சோர்லா மலைப்பகுதி வழியாக, பெலகாவி - கோவா இடையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. பல்லாரியில் ஒரு வாரமாக பெய்யும் மழையால் நாரிஹல்லா அணை நிரம்பியதால் அணையில் இருந்து வினாடிக்கு 700 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இதனால் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வெங்காயம், சோளம், கரும்புகள் நீரில் மூழ்கின.
மஹாராஷ்டிராவில் பெய்யும் கனமழையால், கொய்னா அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரால், கிருஷ்ணா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடலோர மாவட்டமான தட்சிண கன்னடாவின் மங்களூரில் கனமழை கொட்டி தீர்த்தது. மங்களூரு தாலுகா வாமஞ்சூர் அருகே கெத்திகல் என்ற இடத்தில், தேசிய நெடுஞ்சாலையோரம் நிலச்சரிவு ஏற்பட்டது. ராட்சத பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தன.
உத்தர கன்னடாவின் கார்வார் சிர்சியில் தேவிமனே வனப்பகுதி சாலையில், நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் சிர்சி - குமட்டா இணைப்பு துண்டிக்கப்பட்டது. கனமழை காரணமாக சிக்மகளூர், உடுப்பி, மங்களூர் மற்றும் குடகு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.