மகனை கட்டித் தழுவி கண்ணீர் விட்ட தாய் pt desk
தமிழ்நாடு

தேனி | 40 ஆண்டுகளுப் பிறகு ஊர் திரும்பிய மகன்... ஆரத்தழுவி கண்ணீர் விட்ட தாய் - நடந்தது என்ன?

ஆண்டிபட்டி அருகே 13 வயதில் சிறுவனாய் இருந்த போது கோபித்துக் கொண்டு ஊரைவிட்டு சென்றவர், 40 ஆண்டுகளுக்குப் பிறகு தாய் மற்றும் சகோதரர்கள் உள்ளிட்ட சொந்தங்களை சந்தித்த நிகழ்வு பலரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

PT WEB

செய்தியாளர்: மலைச்சாமி

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கதிர்நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நடராஜன் - ருக்குமணி தம்பதியினர். இவர்களுக்கு குமார், செந்தில், முருகன் என்ற 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 1985ம் ஆண்டு சொந்த ஊரிலிருந்து அனைவரும் சென்னைக்கு குடி பெயர்ந்து அங்கு வேலை செய்து வந்தனர். அப்போது மூத்தவரான குமாரை வேலைக்குச் செல்ல பெற்றோர் வலியுறுத்தியதாக தெரிகிறது. இதனால் பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு குமார் வீட்டை விட்டு வெளியேறிச் சென்றார்.

இதையடுத்து காணாமல் போன மகனை பெற்றோர் பல இடங்களிலும் தேடியுள்ளனர். ஆனால், குமாரை கண்டுபிடிக்க முடியவில்லை. மகன் காணாமல் போன மனவருத்தத்தில் இருந்த நடராஜ் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து நடராஜன் மனைவி ருக்குமணி தனது இரண்டாவது மகன் செந்திலுடன் கதிர் நரசிங்கபுரத்தில் குடியேறினார்.

இளைய மகன் முருகன் சென்னையிலேயே வேலை செய்து வந்தார். இதனிடையே 13 வயதில் காணாமல் போன குமார் மீண்டும் ஊருக்குத் திரும்பி செல்லக் கூடாது என்று பல ஊர்களில் கிடைக்கும் கூலி வேலைகளை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனி மாவட்டத்தில் உள்ள மாவூற்று வேலப்பர் கோயிலுக்கு தனது குடும்பத்தினருடன் செல்ல முடிவெடுத்த குமார், பஸ்சில் அங்கு சென்ற போது, கதிர்நரசிங்கபுரம் ஊரை பார்த்ததும் தனது குடும்பத்துடன் அங்கு இறங்கி தனது குடும்ப விவரங்களை ஊராரிடம் விசாரித்துள்ளார். அப்போது ஊர் பொதுமக்கள் அவருடைய குடும்பம் குறித்தும், தாய் ருக்குமணி வசிக்கும் வீடு குறித்தும் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து குமார் தனது தாய் இருக்கும் வீட்டிற்குச் சென்றார்.

40 ஆண்டுகளுக்குப் பின்னர் தனது தாய் ருக்குமணியை சந்தித்த குமார், ஆனந்த கண்ணீர் விட்டபடி தாயை கட்டித் தழுவினார். சுமார் 90 வயதாகும் குமாரின் பாட்டி தனது பேரனை கண்டு மகிழ்ச்சியில் கண்கலங்கினார். உடன் பிறந்த சகோதரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்த குமார் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த சம்பவம் கதிர்நரசிங்கபுரம் கிராம பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது