ஃபெஞ்சல் புயல் மேற்கு - வடமேற்கு திசையில் தற்போது 7 கிமீ வேகத்தில் நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரி கடற்கரை பகுதியில் கரையைக் கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து 90 கிமீ தொலைவிலும், மாமல்லபுரத்தில் இருந்து 50 கிமீ தொலைவிலும் ஃபெஞ்சல் புயல் மையம் கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று மாலையே புயல் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. புயல் கரைப்பகுதியை நெருங்கும்போது, அதன் வேகம் மிகமிகக் குறைந்து மெல்ல நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் கூறுகையில், “மகாபலிபுரத்தில் இருந்து 50 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. வரக்கூடிய மணி நேரங்களில் புயலின் நகரும் வேகமும் படிப்படியாக குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று இரவில் கரையைக் கடக்கத் தொடங்கினாலும் நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை முழுமையாக கரையைக் கடக்க எடுத்துக்கொள்ளும்.
புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைப்பொழிவு அதிகரித்துள்ளது. அடுத்த 6 மணி நேரத்திற்குள் இந்த மாவட்டங்களில் பலத்த மழையை எதிர்பார்க்கலாம். சென்னையில் இன்று இரவு மீண்டும் விட்டு விட்டு மழையை எதிர்பார்க்கலாம்” எனத் தெரிவித்தார்.