ஊராட்சி மன்றத் தலைவர் pt desk
தமிழ்நாடு

சீர்காழி: பதவிக்காலம் முடிய 2 தினங்களே உள்ளது... இப்போது பொறுப்பேற்ற ஊராட்சி மன்றத் தலைவர்! ஏன்?

சீர்காழி அருகே ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்காலம் இன்னும் இரண்டு தினங்களில் முடிவடையும் நிலையில் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார் ஒரு ஊராட்சி மன்றத் தலைவர்... பட்டாசு வெடித்து ஊராட்சி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கிய விசித்திரமும் அரங்கேறியுள்ளது.

PT WEB

செய்தியாளர்: ஆர்.மோகன்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சி மன்றத் தலைவராக அதிமுக-வை சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவர் இருந்து வந்தார். இவர், ஊராட்சியில் அதிக செலவினம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கடந்த 27.10.24 அன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து ஊராட்சி தலைவர் பதவியிலிருந்து தட்சிணாமூர்த்தி பதவி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தட்சிணாமூர்த்தி வழக்கு தொடர்ந்தார்.

ஊராட்சி மன்றத் தலைவர்

இந்த வழக்கு விசாரணையில் சட்டநாதபுரம் ஊராட்சி தலைவராக தட்சிணாமூர்த்தி நீடிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஊராட்சி மன்றத் தலைவராக தட்சிணாமூர்த்தியை மீண்டும் பணியில் தொடர அனுமதி வழங்கினார். இதையடுத்து ஊராட்சி மன்றத் தலைவராக தட்சிணாமூர்த்தி மீண்டும் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அப்போது தட்சிணாமூர்த்தி, சட்டநாதபுரம் பகுதியில் பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

வரும் 5-ம் தேதியுடன் ஊராட்சி தலைவர்களின் பதவி காலம் முடிவடைய உள்ள நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு மீண்டும் தலைவர் பதவி ஏற்ற சம்பவம் சீர்காழி பகுதியில் பேசும் பொருளாகி உள்ளது. அதே நேரம் தன்மீது தவறில்லை என்பதை ஊராட்சி மக்களுக்கு உணர்த்த நீதிமன்றம் சென்று போராடி பதவி ஏற்ற தட்சிணாமூர்த்தியை சட்டநாதபுரம் ஊராட்சி மக்கள் பெருமிதத்துடன் வாழ்த்தினர்.