கோப்புபடம் Pt web
தமிழ்நாடு

சீனாவின் தண்ணீர் யுத்தம்? அருணாச்சலில் அணை கட்டும் இந்தியா.. வெடிக்கும் போராட்டம்!!

சீனாவின் நீர்மின் திட்டத்தால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும், நீர் மற்றும் மின்சாரப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் இந்த அணை அவசியம் என அரசு கருதுகிறது.

Premkumar S

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப்பிரதேசத்தில், சியோங்க் ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிரான கிராம மக்களின் போராட்டம் தற்போது வன்முறையாக வெடித்திருக்கிறது. போராட்டக்காரர்கள் காவல்நிலையத்தை தீயிட்டு சேதப்படுத்தியிருப்பதுடன், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், மத்திய அரசு அங்கு ஏன் அணை கட்ட வேண்டும் என நினைக்கிறது? கிராம மக்களின் கோரிக்கை என்ன? என்பது குறித்துப் பார்க்கலாம்.

அருணாச்சலப்பிரேதேசம்

இந்தியாவின் அருணாச்சலப்பிரதேச மாநிலத்தை, தங்களது பகுதி என உரிமை கொண்டாடி வருகிறது சீனா. இதற்காக முகாம் அமைப்பது, ஊர்களுக்குப் பெயர் சூட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தாலும், அதற்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையில், சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் திபெத்தின் இமயமலைப் பகுதிகளில் தொடங்கி, அருணாச்சலப் பிரதேசம் வழியாக இந்தியாவிற்குள் நுழையும் 'சியாங்' (Siang) நதியின் குறுக்கே அணைக்கட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது சீனா. இந்த நதி திபெத்தில், 'யார்லங் சாங்போ' (Yarlung Tsangpo) என அழைக்கப்படுகிறது.

இந்தியாவின் எல்லையிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில், இதற்கான கட்டுமானப் பணிகல் கடந்த ஆண்டு முதல் வேகமெடுத்திருக்கின்றன. இந்த அணையின் மூலம், 60,000 மெகா வாட் மின்சாரம் தயாரிக்க முடியும் எனக் கூறப்படுகிறது. ஆனால், சீனா இந்த அணையைக் கட்டுவதன் மூலம், இந்தியாவிற்கான தண்ணீரை தடுத்து நிறுத்தவும், ஒரே நேரத்தில் நீரை திறந்துவிடுவது மூலம் இந்தியாவில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தவும் சீனாவால் முடியும் என மத்திய அரசு கருதுகிறது. இந்நிலையில் தான், சீனாவின் தண்ணீர் யுத்த அபாயம் கருதி, அருணாச்சலப்பிரதேசத்தின், சியாங் ஆற்றின் குறுக்கே சுமார் 11,200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட அணை கட்டும் திட்டத்தை அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது.

China - India

இந்த அணையின் மூலம், இந்தியாவிற்கு ஒரு பாதுகாப்பு அரணாகச் செயல்படும் எனவும், தேவைப்படும் நேரங்களில் நீரோட்டத்தை ஒழுங்குபடுத்த முடியும் எனவும் அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், சீனாவின் அணையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை இந்திய அணை எந்த அளவுக்குக் கட்டுப்படுத்தும் என்பது, விரிவான தொழில்நுட்ப ஆய்வுகளுக்குப் பிறகே உறுதியாகத் தெரியவரும்.

இதற்கிடையே, இந்த அணைத் திட்டத்திற்கு எதிராக உள்ளூர் மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, சியாங் பள்ளத்தாக்கில் வசிக்கும் பழங்குடியின மக்கள், தங்களின் பூர்வீக நிலங்கள், விவசாய நிலங்கள், காடுகள் மற்றும் பாரம்பரிய வாழ்விடங்கள் பாதிக்கப்படும் எனத் தெரிவிக்கின்றனர். இந்தத் திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வுகளை மேற்கொள்வதற்கே அரசு தற்போது முயற்சி செய்து வருகிறது என்றாலும், இந்த ஆரம்பக்கட்ட ஆய்வே எதிர்காலத்தில் அணை கட்டுவதற்கான முதல் படியாக அமைந்துவிடும் எனப் போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், ஆய்வுப்பணிகளை நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

கடந்த செப்டம்பர் மாத இறுதியிலிருந்து போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அக்டோபர் 23-ம் தேதி இந்தப் போராட்டம் வன்முறையாக மாறியிருக்கிறது. பாசிகாட்டில் காவல் நிலையம் (Pasighat Police Station) மற்றும் தேசிய நீர்மின் சக்தி கழக அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தீ வைக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதல்களில், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அருணாச்சலப்பிரேதேசம்

மறுபுறம், அணை கட்டுவது குறித்து இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என அருணாச்சலப் பிரதேச பாஜக முதல்வர் பெமா காண்டு (Pema Khandu) தெரிவித்துள்ளார். முதற்கட்ட சாத்தியக்கூறு ஆய்வுகள் மூலம், அணை அமைக்க முடியுமா, எந்த இடம் பொருத்தமானது, நிலவியல் மற்றும் நிலநடுக்க அபாயங்கள் என்ன என்பது ஆராயப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். தொழில்நுட்ப ஆய்வுகள் திட்டம் சாத்தியமற்றது எனக் காட்டினால், அதற்கு மேல் அரசு முன்னேறாது என்றும் உறுதியளித்துள்ளார்.

இவ்வாறு, சீனாவின் நீர்மின் திட்டத்தால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும், நீர் மற்றும் மின்சாரப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் இந்த அணை அவசியம் என அரசு கருதுகிறது. மறுபுறம், தங்களின் பூர்வீக நிலங்களையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் போராடுகின்றனர். இந்தச்சூழலில் தான், இந்த அணைக்கட்டும் விவகாரம் தேசிய அளவில் கவனம் பெற்றிருக்கிறது.