தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட புதிய ரயில்வே திட்டங்களுக்கான நிதியை 62 சதவீதம் அளவில் மத்திய அரசு குறைத்து இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்ற தகவலின்படி, 2025-26 பட்ஜெட்டில் தமிழக புதிய ரயில் திட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட 618 கோடி ரூபாய், திருத்தப்பட்ட மதிப்பீட்டில் 230 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது 62 சதவீத குறைப்பு ஆகும்.
தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட புதிய ரயில்வே திட்டங்களுக்கான நிதியை 62 சதவீதம் அளவில் மத்திய அரசு குறைத்து இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையைச் சேர்ந்த தயானந்த கிருஷ்ணன் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்ற தகவலின்படி, 2025-26 பட்ஜெட்டில் தமிழக புதிய ரயில் திட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட 618 கோடி ரூபாய், திருத்தப்பட்ட மதிப்பீட்டில் 230 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது 62 சதவீத குறைப்பு ஆகும். இதில் 2025 டிசம்பர் வரை வெறும் 144 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. அதேபோல், இரட்டைப் பாதை திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட 722 கோடி ரூபாயில், 30 சதவீதத்திற்கும் குறைவான நிதியே பயன்படுத்தப்பட்டுள்ளது. ரயில்வே வாரியத்தின் விரிவான திட்ட அறிக்கை அனுமதிகள் தாமதமானதால், தமிழகத்திற்கு வரவேண்டிய சுமார் 400 கோடி ரூபாய் நிதி கைநழுவிப் போயுள்ளதாக ஆவணம் சுட்டிக்காட்டுகிறது.
குறிப்பாக காட்பாடி– விழுப்புரம், சேலம்– திண்டுக்கல் போன்ற முக்கிய திட்டங்களுக்கு உரிய காலத்தில் அனுமதி வழங்கப்படவில்லை. திண்டிவனம் – திருவண்ணாமலை,சென்னை – கடலூர் உள்ளிட்ட 5 முக்கிய திட்டங்களில் இதுவரை ஒரு ரூபாய்கூடச் செலவிடப்படவில்லை. ஈரோடு – பழனி திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 50 கோடி ரூபாயிலிருந்து வெறும் 1,000 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. திட்டங்களைத் தமிழக அரசு கைவிட்டதாக மத்திய அமைச்சகம் கூறியதை மாநில அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. நிலம் கையகப்படுத்தத் தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்காததே பணிகளின் தாமதத்திற்கு முதன்மைக் காரணம் எனத் தமிழக அரசு சுட்டிக்காட்டியுள்ளது. வரவிருக்கும் 2026- 27 பட்ஜெட்டிலாவது முடங்கியுள்ள இந்தத் திட்டங்களுக்கு உயிர் கொடுக்கவும், நிலுவையில் உள்ள திட்ட அறிக்கைகளுக்கு உடனடி ஒப்புதல் வழங்கவும் மத்திய அரசு முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.