கைது செய்யப்பட்ட நபர்கள்
கைது செய்யப்பட்ட நபர்கள்  PT WEB
தமிழ்நாடு

திருப்பூர் | ‘YouTube-ல் ட்ரெண்ட் ஆக்குகிறோம்’ மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 7 பேர் கூண்டோடு கைது!

webteam

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது மாணவியொருவர் கடந்த 9ம் தேதி வெள்ளக்கோவில் பகுதிக்கு கலைநிகழ்ச்சி பார்க்க சென்றுள்ளார். அப்போது கலை நிகழ்ச்சி நடந்த இடத்திலும், பிறகு மேடையிலும் ஏறி மாணவி நடனமாடியுள்ளார்.

அப்போது அந்த மாணவியை நோட்டமிட்ட இரு இளைஞர்கள், "நீங்கள் நன்றாக நடனம் ஆடினீர்கள்" எனக் கூறி, ‘யூடியூப்பில் வீடியோ எடுத்து போடுகிறோம், ட்ரெண்ட் செய்கிறோம்’ என அவரை நம்ப வைத்து வேறொரு இடத்துக்கு தனியாக அழைத்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் மீண்டும் இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள்

இதனையறிந்த அப்பகுதியைச் சேர்ந்த மேலும் ஐந்து இளைஞர்கள், மாணவியை மீண்டும் அழைத்துச் சென்று அனைவரும் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மாணவியின் தாய் கொடுத்த புகாரின் பேரில், அப்பகுதி அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது வெள்ளகோவிலில் இருந்த சிசிடிவி காட்சியில் இரு இளைஞர்கள் மாணவியை அழைத்துச் செல்வதும், பிறகு கொண்டு வந்து விடுவதும் பதிவாகியிருந்தது.

இதனையடுத்து அந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், மற்ற இளைஞர்களும் சேர்ந்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வெள்ளகோவில் வட்டாரத்தைச் சேர்ந்த மணிகண்டன், பிரபாகரன், தினேஷ்குமார், பாலசுப்ரமணி, நவீன்குமார், நந்தகுமார், தமிழ்ச்செல்வன் என ஏழு பேரை 'போக்சோ' வழக்கில் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக ஒரே நாளில் காவல்துறையினர் 7 பேரைக் கைது செய்துள்ள நிலையில், மேலும் ஒருவருக்கு இதில் தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த நபரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.