விஜய் தலைமையிலான புதிய தவெக அமைச்சரவையில், சமூகநீதியை வலியுறுத்தும் வகையில் பட்டியல் சமூகத்தினர், பெண்கள், பிராமணர்கள், சிறுபான்மையினர் ஆகியோர் சமநிலையுடன் சேர்க்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் உடன் சேர்ந்து IUML, விசிக போன்ற கூட்டணி கட்சிகளுக்கும் துறை பொறுப்புகள் வழங்கப்பட உள்ள நிலையில், பட்டியல் சமூக அமைச்சர்கள் எண்ணிக்கை எட்டாக உயர வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். தொடர்ந்து அடுத்தகட்ட அமைச்சரவை விரிவாக்கம் குறித்து எதிர்பார்ப்பு இருந்தது.
இந்த சூழலில் ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் தவெக, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த 23 எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இருவர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். இதன் மூலம் 1952-ம் ஆண்டுக்கு பின்னர் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.
அதோடு முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது. புதிய அமைச்சரவையில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த 7 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் தமிழ்நாட்டுக்கு அதிக வருவாயை கொடுக்கும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக லோகேஷ் தமிழ்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர்களாக பட்டியல் சமூகத்தை சேர்ந்த ராஜ்மோகன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் விசுவநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதோடு தமிழ்நாடு அரசியலில் முதல் முறையாக தவெக அமைச்சரவையில் 4 பெண்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், அதில் முக்கியத்துவம் வாய்ந்த தொழில்துறை அமைச்சர் பதவி கீர்த்தனாவுக்கு வழங்ப்பட்டுள்ளது.
அதே போல இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பிராமண சமூகத்தை சேர்ந்த ரமேஸ் நியமிக்கப்பட்டுள்ளதும் கவனம் பெற்றுள்ளது. ஏற்கனவே பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த வெங்கடராமனும் உணவுத்துறை அமைச்சராக இருக்கிறார். இது அனைவரையும் உள்ளடக்கிய அமைச்சரவையாக பார்க்கப்படுகிறது. இதனிடையே இந்த அமைச்சரவையில் விசிக மற்றும் IUML ஆகிய கட்சிகள் இணையும் என்று கூறப்பட்ட நிலையில், அக்கட்சி பொதுச்செயலாளர் காதர் மொகிதீன் தவெக அரசின் அமைச்சரவையில் இணையவுள்ளதாக அறிவித்துள்ளார்.
அக்கட்சி சார்பில் பாபநாசம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற ஷாஜகான் அமைச்சராவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு சிறுபான்மை நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல அமைச்சரவையில் இன்னும் ஆதி திராவிடர் நலத்துறை யாருக்கும் வழங்கப்படாத நிலையில், விசிக-வை சேர்ந்த ஒருவருக்கு அந்த துறை வழங்கப்படும் என கூறப்படுகிறது. விசிகவில் வன்னி அரசுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவர் அமைச்சரானால் தவெக அரசின் அமைச்சரவையில் பட்டியல் சமூக அமைச்சர்களின் எண்ணிக்கை 8-ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.