தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், பொதுக்கூட்டங்கள், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள், தேர்தல் சின்னம் அறிவிப்பு என தமிழக அரசியல் களமே பரபரப்பாகியிருக்கிறது. மேலும், இத்தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக-பாஜக உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் முதன்முறையாக தேர்தலை சந்திக்கவிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் ஆகியவைகளிடையே நான்குமுனைப் போட்டி நிலவிவருகிறது.
மேலும், திமுக கூட்டணி வலுவாக உள்ளது என அரசியல் விமர்சகர்கள் கூறிவரும் வரும் நிலையில், அதிமுக - பாஜக ஆகிய கட்சிகள் மும்முரமாக தங்களது தேர்தல் கூட்டணியை பலப்படுத்தும் செயலில் ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாகத் தான், அன்புமணி தலைமையிலான பாமக, டிடிவி தினகரனின் அமமுக போன்றவை மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்திருக்கிறது. தொகுதிப் பங்கீடு குறித்தான பேச்சுவார்த்தைகளும் அதிமுக கூட்டணியில் தொடங்கப்பட்டு விட்டதாகவே கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, இன்று பிரதமர் மோடி தமிழகம் வரும் நிலையில், பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதன்மூலம், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வருவதற்கு வாய்ப்புள்ளது எனவும் பேசப்பட்டு வருகிறது.
அதன்படி, இன்று (ஜனவரி 23) மதியம் தமிழகம் வரும் பிரதமர் மோடி, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 3 மணியளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றவுள்ளார். முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்தப் பொதுகூட்டத்தில் தேசிய ஜனநாயக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணிக்கட்சிகளின் தலைவர்கள் படம் இடம்பெற்றுள்ளது. மேலும், இந்தப் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு, மதுராந்தகத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு மற்றும் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான பந்தல் மற்றும் பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியை வரவேற்பதற்காக சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு கூட்டணி கட்சிகளின் கொடிகள் மற்றும் பேனர்கள், கட்-அவுட்கள் வைக்கப்பட்டு, மதுராந்தகம் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
மேலும், தொண்டர்களின் வசதிக்காக ஒரு லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருக்கைகள் போடப்பட்டுள்ளன. 200-க்கும் மேற்பட்ட கழிவறைகள் மற்றும் மொபைல் டாய்லெட் வசதிகள், குடிநீர் வசதி உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10 இடங்களில் வாகனங்களை நிறுத்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதில், தொண்டர்களுக்கும், விஐபிக்களுக்கும் தனித்தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் 3500- க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு, சென்னை-திருச்சி ஜிஎஸ்டி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்படுவதாக செங்கல்பட்டு மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை கனரக வாகனங்களுக்கு ஜிஎஸ்டி சாலையில் நேரடி போக்குவரத்து அனுமதி வழங்கப்படாது. சென்னை- திண்டிவனம் மற்றும் திருச்சி-சென்னை மார்க்கங்களில் செல்லும் கனரக வாகனங்கள் மாற்றுப் பாதைகளில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளன. அதன்படி, கிழக்கு கடற்கரை சாலை, காஞ்சிபுரம், வந்தவாசி, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட வழித்தடங்கள் வழியாக ஜிஎஸ்டி சாலையை அடைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.