ஏற்கனவே ஒன்றரை வருடம் சிறை அனுபவம் உள்ளதால், எத்தனை வழக்குகள் போட்டாலும் அஞ்சி ஓடக்கூடியவன் தாம் அல்ல என்று செந்தில் பாலாஜி தெரிவித்தார். எங்கேயும் செல்லாமல் இங்கேயே இருந்து, வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளோம் என்றும், அரசு என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
சென்னை திருவல்லிக்கேணியில் காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட பிறகு முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், எங்கேயும் எனக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை, நான் இங்கேதான் இருந்தேன். வழக்கறிஞர்களை சந்தித்து வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் உயர்நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்துள்ளோம். நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்கு மேகதாது பிரச்சனை இருக்கிறது, விவசாயிகள் கடன் பிரச்சனை இருக்கிறது, சொடக்கு போட்டு பேசிவிட்டு ஆட்சி அமைந்த அடுத்த நொடியே விவசாயிகள் ரோட்டில் போராடக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த பிரச்சனையில் எல்லாம் கவனம் செலுத்தாமல் பொய் வழக்கு போடுவதில் கவனம் செலுத்துகிறது இந்த அரசு.
என்னை மட்டுமல்லாமல் மூத்த அமைச்சர்கள் மீதும் வழக்குகள் போடப்பட்டுள்ளது, யார் யாரையெல்லாம் அவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியும். நேரம் இருக்கு இன்னும் அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஒரு வழக்கல்ல இரண்டு வழக்கல்ல எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன், ஏற்கனவே ஒன்னேகால் வருடம் சிறைவாசத்தை சந்தித்தவன் அதற்கெல்லாம் அஞ்சி ஓடக்கூடிய ஆள் நான் இல்லை” என பேசியுள்ளார்.
மேலும் தமிழ்நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கிறது அதனை திசை திருப்பும் நோக்கில் தான் எங்கள் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டிருக்கிறது என கூறினார்..