விஜய், செந்தில் பாலாஜி pt web
தமிழ்நாடு

“விஜயிடம் இதையெல்லாம் கேளுங்கள்..” - கேள்விகளை அடுக்கிய செந்தில் பாலாஜி!

கரூர் தவெக பரப்புரையில் கூட்ட நெரிசல் காரணமாக 41 உயிரிழந்த நிலையில், அந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார்.

PT WEB

கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி நடந்த தவெக தலைவர் விஜயின் பரப்புரையில் ஏற்ப்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியிருக்கும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தரப்பில் இருந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதும், காவல்துறையின் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

மேலும், கரூர் சம்பவம் தொடர்பாக மௌனம் காத்து வந்த தவெக தலைவர் விஜயும் சம்பவம் நடந்து மூன்று நாட்கள் கழித்து (நேற்று) எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வீடியோவில், “ நான் ஏற்கனவே பல மாவட்டங்களில் பரப்புரை மேற்கொண்டிருக்கிறேன். ஆனால், கரூரில் மட்டும் இப்படி நடப்பது ஏன்?” எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.

செந்தில் பாலாஜி

இந்தநிலையில் தான், கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்துப் பேசியிருக்கிறார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய செந்தில் பாலாஜி, “ கரூரில் நடந்த இந்த துயர சம்பவம், என்னுடைய 29 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் கண்டிராத துயர சம்பவம்.. கடந்த மூன்று நாட்களாக இந்த நிகழ்வில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. இனி இந்த மாதிரியான துயர சம்பவம் நிகழ்ந்துவிடக் கூடாது. இந்த சம்வத்தை நான் அரசியலாக பார்க்க விரும்பவில்லை, மனிநேயத்துடனேயே பார்க்கிறேன். ஏனெனில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களில் 27 குடும்பங்களை தனிப்பட்ட முறையிலேயே எனக்குத் தெரியும்.

அவர்கள் கேட்ட லைட் ஹவுஸ் கார்னர் பகுதில் 7 ஆயிரம் பேர் மட்டுமே நிற்க முடியும். உழவர் சந்தை பகுதில் அனுமதி கொடுத்திருந்தால் 5 ஆயிரம் பேர் மட்டுமே நிற்க முடியும். நீங்கள் வேலுசாமிபுரம் பகுதியையும் அவர்கள் கேட்டதை ஒப்பிட்டு பார்த்தால் உங்களுக்கே தெரியும்.

கரூர் தவெக பரப்புரை

நாங்கள் சமீபத்தில் முப்பெரும் விழா கூட்டம் நடத்தினோம். 2 லட்சம் வருவதாக கணித்து தனியார் இடத்தில் விழா நடத்தினோம். அங்கு குடிநீர், பிஸ்கட் உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளையும் நாங்கள் கொடுத்தோம். ஆனால், விஜயின் கரூர் பரப்புரை நடந்த இடத்தில், ஒரு தண்ணீர் பாட்டில் கூட காணப்படவில்லை. அரசியல் கட்சிக் கூட்டத்திற்கு வருகை தந்தவர்களில் அடிப்படைத் தேவைகளுக்கு உறுதி செய்ய வேண்டும். நான் குறையாக சொல்லவில்லை இனிமேல் நடக்கும் கூட்டங்களில் திருத்திக் கொள்ள வேண்டும் என்று தான் கூறுகிறேன்.

குறிப்பாக, அவர் குறித்த நேரத்தில் பரப்புரையில் ஈடுபட்டிருந்தால் இந்த பிரச்சனை நடந்திருக்காது... ஏனென்றால் அவருக்கு நேரம் கொடுத்த 4 மணிக்கு 5 ஆயிரம் பேர் தான் இருந்தார்கள். ஆனால், சனிக்கிழமை சம்பள நாள் வேலைக்கு சென்றவர்கள், அவரவர் வீடுகளுக்கு திரும்பிக்கொண்டிருந்த நேரம்.. அதனால் கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது. அவருக்கு கொடுத்த நேரத்தில் அவர் பேசியிருந்தால் இந்த அசம்பாவிதங்கள் நடந்திருக்காது..

கரூர் கூட்டநெரிசலல்

தொலைக்காட்சிகளிலேயே பார்த்திருப்பீர்கள், விஜய் பேச ஆரம்பித்தபோது கூட்ட நெரிசல் காரணமாக மக்கள் கீழே இருந்து உதவி கேட்கின்றனர். அதன்பின்னர் தான் அவர்களுக்கு தண்ணீர் பாட்டிலை தூக்கிப் போடுகிறார்கள்.

பொதுவாக எந்த கட்சியாக இருந்தாலும் சரி, தலைவர்கள் முன் சீட்டில் தான் இருப்பார்கள். ஆனால், இந்தக் கூட்டத்தில் 500 மீட்டர் இருக்கும் போது வாகனத்தின் உள்ளே சென்று விட்டார், மின்விளக்கு அணைந்து விட்டது. மேலும், கூட்ட நெரிசல் காரணமாக இங்கே பேசுங்கள் உள்ளே செல்ல வேண்டாம் இங்கேயே பேசுங்கள் என்று கூறிய போதும் அவர் கேட்கவில்லை. குறிப்பிட்ட இடத்தில் போய் பேசுயே தீருவேன் என்ற உறுதியுடன் இருந்தார் எனத் தெரிய வருகிறது. காவல்துறையின் எந்தப் பேச்சையும் அவர் கேட்கவில்லை... கேட்டிருந்தால் இந்த அசம்பாவிதங்கள் நடந்திருக்காது. கூட்ட நெரிசல் காரணமாக கொஞ்சம் முன்னாடியே பேசியிருந்தால் ஒன்னும் ஆகிவிடப் போவதில்லை..

தவெக கரூர் பரப்புரை

ஆனால், கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது என விஜய் கேட்பது எல்லா நாட்களும் நான் வண்டியில் வேகமாகத்தான் போவேன் இன்றைக்கு மட்டும் ஏன் விபத்து நடக்கிறது என கேட்பது போல இருக்கிறது. ஏற்கனவே அவர் கூட்டங்களில் மயக்கமடையும் நிகழ்வும் மரணமடையும் நிகழ்வும் நடந்திருக்கிறது” என்றுப் பேசினார்.

மேலும் விஜயிடம் கேளுங்கள் என கேள்விகளை முன்வைத்த செந்தில் பாலாஜி, “தவறு செய்தவர்கள் தவறை ஒப்புக்கொள்ள வேண்டும். அரசியல் கட்சியாக அவர்கள் சரியாக செயல்படாததே இந்த இழப்புக்கு காரணம். ஏன் 7-8 மணி நேரம் தாமதமாக வந்தார், ஏன் வேனுக்குள் சென்று உட்கார்ந்து கொண்டார், ஏன் கூட்டநெரிசல் உள்ள பகுதியில்தான் வாகனத்தை நிறுத்துவேன் என்று சொன்னார், இதற்கெல்லாம் அந்த கட்சியினர் தான் பதில் சொல்லவேண்டும்” என கேள்விகளை அடுக்கினார்.

தொடர்ந்து, “பாதிக்கப்பட்ட மக்களின் இல்லத்தில் ஒருவனாக இருந்துப் பேசுகிறேன். நான் என்னுடைய குடும்பத்தை நேசிப்பதை விட என்னுடைய தொகுதி மக்களை அதிகமாக நேசிக்கக்கூடியவன். எனக்கு கேள்வி வருகிறது எப்படி உடனேயே மருத்துவமனைக்கு சென்றதாக கேட்கிறார்கள்? நான் இந்த அலுவலத்திலேயே தான் இருப்பேன். இங்கிருந்து அமராவதி மருத்துவமனைக்கு செல்வதற்கு எவ்வளவு நேரம் ஆகிவிடப்போகிறது. மக்கள் பிரச்சனைகளில் இருக்கும் போது அவர்களை பார்க்காமல் சென்னைக்கு போக சொல்கிறீர்களா? நான் இருக்கும் வரை மக்களுக்கு உதவி செய்வதை முன்னணியில் தான் இருப்பேன். தொடர்ந்து இந்தக் கூட்டம் கட்டுக்கடங்காத கூட்டமா எனக் கேட்கிறார்கள். ஆனால், இந்தக் கூட்டத்தை கட்டுப்பாடற்ற கூட்டம் என்று தான் கூறுவேன்” என்றார்.