ADMK Senior leaders Revolt ADMK Media
தமிழ்நாடு

EPS கையை விட்டு செல்கிறதா அதிமுக.? ஒன்றிணைந்த முக்கிய தலைவர்கள்.. கட்சியில் உச்சகட்ட சலசலப்பு!

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டதால் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Praveen Joshva L

தொடர்ச்சியான தேர்தல் தோல்விகளால் அதிமுக மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்ட நிலையில், கட்சியில் தலைமைக்கு எதிரான அதிருப்தி வெளிப்படையாக வெடித்துள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பில் எம்.எல்.ஏக்கள் இரு அணிகளாகப் பிளவுபட்டு வாக்களிக்க, EPSக்கு எதிரான அணிக்கு எண் பலம் அதிகரித்துள்ளது. இதே நேரத்தில், தனது நிலைப்பாட்டுக்கு எதிராக வாக்களித்த எம்.எல்.ஏக்களின் கட்சி பதவிகளை EPS பறித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவாகியுள்ளது. அதே போல திமுக கூட்டணி இரண்டாம் இடம்பெற்ற நிலையில், அதிமுக கூட்டணி மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது.

அதிமுக

கடந்த 50 ஆண்டுகளாக தமிழக அரசியல் திமுக - அதிமுகவை மையமாக கொண்டே இயங்கிவந்த நிலையில், தற்போது முதல்முறையாக அதிமுக மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து தொடர்ச்சியாக அதிமுக பல்வேறு தேர்தல்களில் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வந்தது. இதனால் கட்சியின் பல்வேறு மட்டங்களில் தலைமை மீது அதிருப்தி நிலவி வந்தது.

இந்த சூழலில், தற்போது சட்டமன்றத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து கட்சியில் நிலவிய அதிருப்தி பெரியளவில் வெளிப்படையாக வெடித்துள்ளது. சில அதிமுக எம்.எல்.ஏக்கள் எஸ்.பி.வேலுமணி - சி.வி.சண்முகம் தலைமையில் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து விலகி தனியே சென்றதாக தகவல் வெளியான நிலையில், சட்டப்பேரவை நிகழ்வில் அது உறுதியானது.

அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான 22 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராகவும், எஸ்.பி.வேலுமணி - சி.வி.சண்முகம் தலைமையில் 25 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர். இதன் மூலம் அதிமுகவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு எதிரானவர்களின் கை ஓங்கியது தெளிவாக தெரிந்தது.

அதே போல அதிமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான 'நமது அம்மா' இதழில் எஸ்.பி.வேலுமணி - சி.வி.சண்முகம் ஆகியோருக்கு ஆதரவான செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் அக்கட்சியின் ஊடகமாக கருதப்பட்ட நியூஸ் ஜெ செய்தி தொலைக்காட்சியில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான செய்திகள் புறக்கணிக்கப்பட்டன. நியூஸ் ஜெ செய்தி தொலைக்காட்சி நிர்வாகத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி- தங்கமணி ஆகியோர் முக்கிய பங்குதாரர்களாக உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் தற்போது வரை எடப்பாடி பழனிசாமியே அதிமுகவின் பொதுச்செயலாளராக உள்ளார். பொதுக்குழுவை கூட்டி, எடப்பாடி பழனிசாமியை பதவியில் இருந்து நீக்கினால் மட்டுமே அதிருப்தியாளர்களின் கைகளுக்கு அதிமுக வர வாய்ப்புள்ளது. இதனால் விரைவில் பொதுக்குழுவை கூட்டும் பணியில் அதிருப்தி தலைவர்கள் களமிறங்கியுள்ளனர்.

இதனிடையே சட்டமன்றத்தில் தனது நிலைப்பாட்டுக்கு எதிராக வாக்களித்த எம்.எல்.ஏக்களின் கட்சி பதவிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பறித்து அதிரடி காட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.