முன்னாள் அமைச்சரும் கோபிசெட்டிபாளையம் எம்எல்ஏவுமான செங்கோட்டையன், தனது எம்எல்ஏ பதவியை இன்று ராஜிநாமா செய்தார். இத்தகைய சூழலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை சந்தித்திருக்கிறார் செங்கோட்டையன்.
அதிமுக தலைமையின் மீது கடும் அதிருப்தியில் இருந்து வரும் செங்கோட்டையன், சபாநாயகர் அப்பாவுவை, தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். தாம் வகித்து வரும் கோபிசெட்டிபாளையம் எம்எல்ஏ பதவியில் இருந்து விலகுவதாகக் கூறி, அதற்கான கடிதத்தை அப்பாவுவிடம் செங்கோட்டையன் அளித்தார். இதற்கிடையே அவர் தவெகவில் இணையப்போகிறாரா அல்லது திமுகவில் இணையப்போகிறாரா என்ற கேள்விகளும் எழுந்தன. ஏனெனில், தலைமைச் செயலகத்தின் வெளியே அமைச்சர் சேகர்பாபுவைச் சந்தித்துப் பேசினார் செங்கோட்டையன்.
அதோடு, செங்கோட்டையன் எம்.எல்.ஏ பதவியை ராஜிநாமா செய்தது தொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய அன்வர் ராஜா, "செங்கோட்டையனை திமுகவிற்கு வரவேற்கிறேன்" எனப் பேசியிருந்தார். இந்நிலையில்தான் தவெக தலைவர் விஜயை சந்தித்திருக்கிறார் செங்கோட்டையன்.
கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி, கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து பிரிந்த ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை ஒருங்கிணைக்க வேண்டும் என்று கட்சித் தலைமையிடம் வலியுறுத்தினார். இதையடுத்து அவரிடமிருந்த அதிமுகவின் ஈரோடு மேற்கு மாவட்டச் செயலாளர், மாநில அமைப்புச் செயலாளர் ஆகிய கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் தற்போது விஜய்யை செங்கோட்டையன் சந்தித்துள்ளார். தவெகவில் அவர் இணையும் பட்சத்தில் என்ன பதவி அவருக்கு கொடுக்கப்படும் என்பது குறித்து யூகங்கள் கிளம்பியுள்ளன. என்.ஆனந்திற்கு இணையாக பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படும் என்றே அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. செங்கோட்டையன் இணைவது கொங்கு மண்டலத்தில் தவெகவின் செல்வாக்கை அதிகரிக்கச் செய்யும். அத்துடன் அவரது அரசியல் அனுபவமும் தவெகவுக்கு பெரிய அளவில் பயன்படும் என்று சொல்லப்படுகிறது.