தவெகவில் செங்கோட்டையன் பெயர் தேர்தல் அறிக்கை குழுவில் இல்லாததால், அவருக்கு அவமானம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் செங்கோட்டையன் பதிவிட்டுள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தேர்தல் அறிக்கை தயாரிப்பில் மும்முரமாக செயல்பட்டுவரும் நிலையில், தவெகவும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு மற்றும் பிரச்சாரம் என இரண்டு முக்கிய களத்தையும் கவணிக்க குழுவை அறிவித்தது.
முன்னதாக தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் 12 பேர் அடங்கிய குழுவை அறிவித்த தவெக தலைவர் விஜய், பின்னர் பிரச்சாரக் குழுவையும் அறிவித்தார். தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் அனுபவம் வாய்ந்த தவெகவின் மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பெயர் இடம்பெறாததும், பிரச்சாரக் குழுவில் ஆனந்த், ஆதவ் அர்ஜுனுக்கு பிறகு 3வது பெயராக இடம்பெற்றதும் பேசுபொருளாக மாறியது.
இந்தவிவகாரத்தை பெரிதாக சுட்டிக்காட்டிய சில செய்தி நிறுவனங்கள், தவெகவில் செங்கட்டையனுக்கு அவமானம் ஏற்படுவதாகவும், முன்னாள் அமைச்சர் வேறு முடிவுக்கு வந்துவிட்டதாகவும் கூறி செய்தி வெளியிட்டன. இந்தசூழலில் பரவிய வதந்திக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது பதிவொன்றை பதிவிட்டுள்ளார் செங்கோட்டையன்.
தவெகவில் பிரச்னை என்று பதவிய வதந்திகளுக்கு இடையே பதிவிட்டிருக்கும் செங்கோட்டையன், “புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் வந்தவன் நான். சோதனை ஏற்பட்ட போது என்னை கரம் பிடித்து அரசியலில் ஒரு வரலாறு படைகின்ற அளவிற்கு இன்று என்னை உருவாக்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதி அவர்கள் என்றும் என் நெஞ்சத்தில் நீங்கா இடம் பெற்றவர். அவர் 2026 இல் தமிழ்நாடு முதலமைச்சர் ஆகும் வரை நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து மக்கள் செல்வாக்கோடு அவரை ஆட்சி கட்டிலில் அமர வைப்போம். அவருடைய தியாகத்தையும், மனித நேயத்தையும் எவராலும் ஒப்பிட இயலாது. மக்கள் நெஞ்சங்களில் நிறைந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார். எங்கள் வாழ்வும், தமிழகத்தின் எதிர்காலமும், அவருடைய தலைமையில் அமையப் போகின்றது. அதற்காகத்தான் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி வருகிறோம்.
நாளிதழில் உண்மைக்கு மாறான செய்தி வெளியாகி இருப்பது வேதனை அளிக்கிறது. நடு நிலை என்று சொல்லிக்கொண்டு இதுபோன்ற தவறான செய்திகளை வெளியிடுவது பத்திரிகை தர்மத்திற்கு உகந்ததல்ல. இந்த செய்தியை நான் வன்மையாக கண்டிக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.