vijay, sengottaiyan pt web
தமிழ்நாடு

விஜயுடன் இணையும் செங்கோட்டையன்.? அரசியல் கட்டமைப்பை விரிவாக்கும் தவெக... ஓபிஎஸ் ரியாக்சன்!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெக தலைவர் விஜய் முன்னிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது உறுதியாகியிருக்கிறது.

PT WEB

தமிழக வெற்றிக் கழகத்தில் வருகின்ற 27-ஆம் தேதி முக்கிய அரசியல் இணைப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில், தவெக கட்சித் தலைவர் விஜய் முன்னிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியில் இணைவது உறுதியாகி இருக்கிறது. இதனுடன், ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்டு, புதுச்சேரி பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் மற்றும் காரைக்கால் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அசனாவும் தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைகின்றனர்.

ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்டு, சாமிநாதன்

மேலும், பிற அரசியல் கட்சிகளை சேர்ந்த பேச்சாளர்கள் மற்றும் நிர்வாகிகள் 5 பேர் விஜய் முன்னிலையில் கட்சியில் இணைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் கட்டமைப்பு மேலும் விரிவடையும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முக்கியமாக, தமிழக அரசியலில் நீண்ட அனுபவம் கொண்ட செங்கோட்டையனுக்கு அவரின் நிர்வாக அனுபவம் மற்றும் அரசியல் செயல்திறனை கருத்தில் கொண்டு, மாநில அளவிலான ஒரு முக்கிய பதவி வழங்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுகவில் நிகழ்ந்து வரும் உட்கட்சிப் பூசல் காரணமாக ஓ. பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் உட்பட பலரையும் கட்சியிலிருந்து அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமி நீக்கியிருந்தார். இந்நிலையில்தான் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், அதிமுக ஒன்றிணைய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பேசியதன் விளைவாக, அதிமுகவின் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்தும், கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

தொடர்ந்து, அக்டோபர் 31ல் அதிமுக தலைமையின் கட்டுப்பாடுகளை மீறியதாகக் கூறி செங்கோட்டையன் அதிமுக-வின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்பட்டார். தனித்து செயல்பட்டு வந்த செங்கோட்டையன் தவெக-வில் இணைவது தற்போது உறுதியாகியிருக்கிறது.

அவரிடம் தான் கேட்க வேண்டும்!

செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், “அவரிடம் (செங்கோட்டையன்) தான் கேட்க வேண்டும்” என தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.