சேகர்பாபு Pt web
தமிழ்நாடு

போலீசாரை மிரட்டிய வழக்கு - காவல்நிலையத்தில் ஆஜரானார் சேகர்பாபு!

சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு ஆஜர்.

Premkumar S

திமுக ஆட்சிக்காலத்தில் 1000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத்தருவதாகக் கூறி, ரூ.100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக, தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப்புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், கடந்த 26-ம் தேதி முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அன்பில் மகேஸ் தரப்பில் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, அன்பில் மகேஸ் அதேநாள் மாலை கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து, அவரை நவம்பர் 6-ம் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்ற கொடுத்த உத்தரவையடுத்து, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், அன்பில் மகேஷ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்தபோது, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி உள்ளிட்ட ஏரளமான திமுகவினர் திரண்டிருந்தனர். அப்போது, சேகர்பாபு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது போன்ற காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்தது.

இதைத் தொடர்ந்து, சேகர்பாபு மீது கொலை மிரட்டல், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்டப் பிரிவுகளின் கீழ் சென்னை வேப்பேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான, விசாரணைக்கு ஆஜராக சேகர்பாபுவுக்கு காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து, இன்று முன்னாள் அமைச்சர் சேகர்பாபு சென்னை வேப்பேரி காவல்நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகியிருக்கிறார்.