பொன்ராஜ் - சீமான் web
தமிழ்நாடு

பெண்கள் குறித்து ஆபாச பேச்சு| ”பொன்ராஜ் பேசியது தவறில்லை..” - சீமான் ஆதரவு கருத்து!

தவெக பெண்களை விலைமாதர்கள் என பொன்ராஜ் பேசியதற்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

Rishan Vengai

தவெக பெண்களை விலைமாதர்கள் என பொன்ராஜ் பேசியதற்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக விஜயின் ரசிகைகளும், தவெக பெண் தொண்டர்களுமான சிலர் வெளிப்படுத்திய கருத்தை, மோசமாக சித்தரித்து விபச்சாரிகள் என கடுமையாக விமர்சித்திருந்தார் அரசியல் விமர்சகரான பொன்ராஜ் வெள்ளைச்சாமி. இவர் மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாமிற்கு ஆதரவாளராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொதுவெளியில் தெரிவித்த ஒரு கருத்திற்கு பெண்களை விபச்சாரிகள் என விமர்சித்த பொன்ராஜுக்கு சமூகவலைதளத்தில் அதிகப்படியான எதிர்ப்பு கிளம்பியது. மேலும் தன்னுடைய கருத்திற்கு மன்னிப்பு கேட்க மறுத்த பொன்ராஜ், அவர்களை அப்படி சொல்லாமல் பிறகெப்படி சொல்ல முடியும் என்றும் மீண்டும் தெரிவித்தது பேசுபொருளாக மாறியது.

இந்தசூழலில் தவெக தலைவர் விஜய் உட்பட தவெக நிர்வாகிகளும் பொன்ராஜுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், விஜய் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியை நேரில் சந்தித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் அளித்துள்ளார்.

இந்தசூழலில் இந்த விவகாரம் அரசியல் களத்திலும் பேசுபொருளாக மாறியுள்ளது.

பொன்ராஜ் பேசியதுதவறில்லை.. சீமான் ஆதரவு கருத்து!

பொன்ராஜ் பேசியது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “பொன்ராஜுக்கு அரசியல் இல்லை, கட்சி இல்லை, வாக்கு இல்லை, அவருக்கு சமூக அக்கறை. அதனால் தான் அவர் அப்படி பேசியிருக்கிறார், அவர் வெளிப்படையாக சொல்லிவிட்டார், மற்றவர்கள் மனதில் புழுங்கி கொண்டு இருக்கிறார்கள். பொன்ராஜ் பேசுனது தவறில்லை, அவர் யாரையும் காயப்படுத்த பேசவில்லை.. ஆதங்கத்தில்தான் அப்படி பேசியிருக்காரு.

அவரை கண்டிக்க உங்களுக்கு என்ன தகுதியிருக்கு, என் கட்சி பிள்ளைகளை மோசமாக எழுதுகிறார்கள். அப்போது யாரும் ஏன் கண்டிக்கவில்லை, தவெக பெண் நிர்வாகிகள் மோசமாக பேசும்போது ஏன் தடுக்கவில்லை” என பேசினார்.

பொன்ராஜ் பேசிய மோசமான கருத்திற்கு சீமான் ஆதரவு தெரிவித்திருப்பதும் விமர்சனத்தை பெற்றுவருகிறது.