Jayakumar pt desk
தமிழ்நாடு

”பெரியார் குறித்து பேசுவதை சீமான் நிறுத்திக் கொள்ள வேண்டும்; தொடர்ந்து பேசினால்..” - ஜெயக்குமார்!

பெரியார் குறித்து சீமான் பேசுவது மக்களை திசைதிருப்பும் செயல். மறைந்த தலைவரின் புகழை இழிவுபடுத்துவது பயன்பாடற்ற செயல் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

PT WEB

செய்தியாளர்: ஸ்டாலின்

தமிழ்நாட்டை பாலைவனமாக மாற்ற வேண்டும் என்பதே திமுக அரசின் நோக்கம்:

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் 13 மணல் குவாரிகளை திறக்க அரசு முடிவு எடுத்துள்ளதாக செய்திகள் வருகிறது. திமுக ஆட்சியில் இயற்கை வளங்கள் தொடர்ந்து சூறையாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. ஊழல் செய்ய வேண்டும், கொள்ளை அடிக்க வேண்டும், தமிழ்நாட்டை பாலைவனமாக மாற்ற வேண்டும் என்பதே திமுக அரசின் நோக்கம்.

சீமான் - பெரியார்

பெரியாரை இழிவுபடுத்துவதை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது:

இயற்கை வளம் சூறையாடுவதை அதிமுக அனுமதிக்காது, மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும். மறைந்த தலைவர் புகழுக்கு எந்த வகையிலும் இழுக்கு ஏற்படுத்துவது பயன்பாடற்ற செயல். பெரியாரை இழிவுபடுத்துவதை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது. பெரியார் குறித்து சீமான் பேசுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும், தொடர்ந்து பேசினால் அரசியலில் தனிமை படுத்தப்படுவார்.

திமுக செய்யும் அராஜகங்களுக்கு அளவே இல்லாத நிலை உள்ளது:

நாட்டில் விலைவாசி உயர்வு.. சட்டம் ஒழுங்கு சீர்கேடு.. பாலியல் வன்கொடுமை விவகாரம் இப்படி எத்தனையோ பிரச்னைகள் உள்ளது. அதை பற்றி பேசாமல், பெரியார் குறித்து சீமான் பேசுவது மக்களை திசை திருப்பும் செயல். பெரியார் சொல்லாததை எல்லாம் சொல்லியதாக மக்களை திசை திருப்பும் அவசியம் சீமானுக்கு ஏன் வந்தது.

திமுக செய்யும் அராஜகங்களுக்கு அளவே இல்லாத நிலை உள்ளது. கிழக்கு கடற்கரை சாலை விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்து கடுமையான தண்டனை வாங்கித் தர வேண்டும்.

cm stalin

பத்திரிகையாளர்களின் செல்போன்களில் உள்ள தரவுகளை காவல்துறை திருட முயல்கிறதா?

அதை விடுத்து முதல் தகவல் அறிக்கையை கசிய விடுவது. பாதிக்கப்பட்ட பெண் பெயரை வெளியிடுவது.. பெண்கள் புகார் அளிக்க வருவதற்கே அச்ச உணர்வு ஏற்படுத்தும் செயல். அண்ணா பல்கலை விவகாரத்தில் செய்தியாளர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்வது கண்டிக்கத்தக்கது. பத்திரிகையாளர்களின் செல்போன்களில் உள்ள தரவுகளை காவல்துறை திருட முயல்கிறதா என்று கேள்வி எழுப்பிய அவர், பாலியல் விவகாரத்தில் திமுக போன்று வேடிக்கை பார்க்காமல் அதிமுக உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது” என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.