விஜயை எப்படியாவது கூட்டணிக்குள் இழுத்துவர வேண்டுமென்று பாஜக முயற்சித்து வருவதாக நாதக சீமான் கூறியுள்ளார்.
கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இரவு தவெக தலைவர் விஜய் பரப்புரையில், கூட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நெஞ்சைவிட்டு அகலாத இந்த துயரச் சம்பவம் தொடர்பாக ஒரு நபர் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் காவல் துறை தரப்பிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
மறுபக்கம், இந்த விவகாரத்தில், தவெகவின் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், பொதுச் செயலாளர் ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது காவல் துறையினர் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்தசூழலில் ஏற்பட்ட துயரச்சம்பவத்திற்கு யாரும் பொறுப்பேற்காமல் தவெகவினர் காவல்துறை மீதும், காவல்துறை தவெகவினர் மீதும் மாறி மாறி பழிபோட்டு வருகின்றனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், இப்படியான துயரச்சம்பவத்தில் ஒருவர் மீது ஒருவர் பழிபோட்டு கொள்வதை பார்க்கும்போது வேதனையாக இருப்பதாக தெரிவித்தார்.
கரூர் துயரச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தம்பி விஜய் கரூருக்கு வருவதால் தான் அவ்வளவு கூட்டம் கூடியது. அவர் வந்ததால் தான் கூட்டம் கூடியது என்பது தான் முக்கிய காரணம். அப்படியிருக்கும் போது அதற்கு பொறுப்பேற்று நான் வருந்துகிறேன் என கூறியிருக்க வேண்டும். அதைவிடுத்து பழியை காவல்துறையே ஏற்கணும், அரசே ஏற்கணும் என வரும்போது தான் சிக்கல் ஏற்படுகிறது. இந்த விசயத்தில் அரசு, தவெக இரண்டு பேருக்குமே பொறுப்பு இருக்கிறது. பொறுப்பாக இருக்க தவறவிட்டுட்டோம் இழப்பு ஏற்பட்டுவிட்டது என வரும்போது, சரி தவறு நடந்துவிட்டது வருங்காலத்தில் இப்படி நடக்க கூடாது என முடிவெடுப்பது தான் சரி.
ஆனால் அதைவிட்டுவிட்டு இரண்டு தரப்பும் மாறி மாறி பழிப்போட்டுக்கொள்வதை பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. இது ஏற்பட்ட உயிரிழப்புகளை விட கொடுமையான ஒன்றாக இருக்கிறது” என தெரிவித்தார்.
மேலும் விஜய்க்கு பாஜக ஆதரவு தெரிவிப்பது குறித்து பேசிய சீமான், எப்படியாவது விஜயை கூட்டணிக்குள் இழுத்துவர பாஜக முயற்சிக்கிறது. அவர் முதல் மாநாடு நடத்தும்வரை நாங்கள் வாழ்த்தி தான் வந்தோம், ஆனால் மாநாட்டில் அவர் கொண்டுவந்த திராவிட சிந்தாத்தால் சிக்கல் ஏற்படது. அதிலும் திராவிடம் தமிழ் தேசியம் இரண்டும் ஒன்று என கூறும்போது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.
என்னைப்பொறுத்தவரை விஜய் பரப்புரை முறைகளை நிறுத்திவிட்டு ஒரு இடத்தில் பொதுக்கூட்டம் நடத்துவது நல்லது. அப்படி இல்லாமல் விஜய் பிரச்சாரம் செய்யவந்து பிரச்னை ஏற்பட்டால் அதற்கு அவர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்தார்.