தமிழ்நாட்டு வாக்காளர்களாக மாறப்போகும் வடமாநிலதவர்கள்?  fb
தமிழ்நாடு

தமிழ்நாட்டு வாக்காளர்களாக மாறப்போகும் இத்தனை லட்சம் பீகார் மக்கள்? - சீமான் சொல்லும் அதிர்ச்சி தகவல!

தமிழ்நாட்டில் குடியேறியுள்ள பிஹார் மக்களில் சுமார் 7 லட்சம் பேர் தமிழ்நாட்டு வாக்காளர்களாக மாறப்போகிறார்கள் என்ற அதிர்ச்சியான யூகத்தை வெளியிட்டிருக்கிறார் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

PT WEB

தமிழ்நாட்டில் குடியேறியுள்ள பிஹார் மக்களில் சுமார் 7 லட்சம் பேர் தமிழ்நாட்டு வாக்காளர்களாக மாறப்போகிறார்கள் என்ற அதிர்ச்சியான யூகத்தை வெளியிட்டிருக்கிறார் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

அது நடந்துவிட்டால், இனி தமிழ்நாட்டு அரசியலைத் தீர்மானிக்கும் ஆற்றலாக வட மாநிலத்தவரே திகழ்வர் என்றும், தேசிய கட்சிகளின் ஆட்சி அதிகாரத்தை தமிழ்நாட்டில் அனுமதிக்காத தடுப்பு அரண் தகர்ந்துவிடும் என்றும் எச்சரித்திருக்கிறார் சீமான்.

தமிழ்நாட்டின் அரசியலையே மாற்றியமைக்க வல்ல பிரச்சினை எனும் தொனியில், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்மையில் பிஹார் மாநிலத்தில் நடந்த 'சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி'யின்போது, அம்மாநிலத்திலிருந்து வெளியேறியுள்ள 36 லட்சம் பிஹார் மக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருப்பதையும், அவர்கள் வேலைக்காக குடியேறியுள்ள மாநிலங்களிலேயே இனி வாக்குரிமை தரப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

பிஹாரில் இருந்து புலம் பெயர்ந்த 36 லட்சம் பிஹாரிகளில் ஏறத்தாழ 7 லட்சம் பேர் தமிழ்நாட்டில் குடியேறியுள்ள நிலையில், விரைவில் அவர்கள் தமிழ்நாட்டு வாக்காளர்களாக வாக்குரிமை பெறவுள்ளனர் என்பது பெரும் அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேபோல, “வாக்காளர் சிறப்புத் திருத்தம் என்ற தேர்தல் ஆணையத்தின் புதிய திட்டத்தின்படி தமிழ்நாட்டில் குடியேறியுள்ள 2 கோடி வட மாநிலத்தவர்கள் இனி தமிழக வாக்காளர்களாக எளிதாக வாக்குரிமை பெறமுடியும்” என்று கூறியிருக்கும் சீமான், ஆறரை கோடி தமிழ்நாட்டு வாக்காளர்களில் புதிதாக இரண்டு கோடி வட மாநிலத்தவர் இணைந்ததால் அது தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, தமிழர்களின் குறைந்தபட்ச அரசியல் அதிகாரத்தையும் பறித்துவிடும் என்று கவலை தெரிவித்திருக்கிறார்.

“எப்படி இந்திய நாடாளுமன்றத்தில் தமிழர்கள் தங்களுக்கு எதிரான சட்டங்களைத் தடுக்க முடியாதபடி சிறுபான்மையாக உள்ளனரோ, அதைப்போன்ற அவல நிலை, இனி வரும் காலத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்திலும் ஏற்படும்” என்றும், அதன் மூலம் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக தேசிய கட்சிகளின் ஆட்சி அதிகாரத்தை தமிழ்நாட்டில் அனுமதிக்காத தடுப்பு அரணாக விளங்கிய தமிழர்களின் இறுதி ஆயுதமான வாக்குரிமை பெரும்பான்மையை நாம் இழக்கப் போகிறோம் என்றும் சீமான் எச்சரித்துள்ளார்.

“இந்தி திணிப்பை எதிர்க்கும் தமிழ்நாட்டில், இந்திக்காரர்களைத் திணிக்கும் பாஜகவின் சூழ்ச்சியை இனியேனும் உணர வேண்டும்” என்றும், நீண்ட காலமாக நாம் தமிழர் கட்சி வலியுறுத்தி வரும் வெளியார் வருகையை முறைப்படுத்தும் 'உள் நுழைவுச்சீட்டு முறையை' விரைந்து தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துவது ஒன்றே நிகழவுள்ள பேராபத்திலிருந்து தமிழ்நாட்டையும், மக்களையும் தற்காப்பதற்கான ஒரே தீர்வு” என்றும் அந்த அறிக்கையில் சீமான் யோசனை தெரிவித்திருக்கிறார்.

“பாஜக., தான் ஆள முடியாத மாநிலங்களில், ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்றுதவற்காக, தேர்தல் ஆணையத்தைக் கைப்பாவையாகப் பயன்படுத்தி, மக்களாட்சி முறைமையைக் குழிதோண்டி புதைக்க முயலும் இக்கொடுங்கோன்மைக்கு எதிராக அனைத்து ஜனநாயக ஆற்றல்களும் போராட முன்வர வேண்டும்” என்று அழைப்பு விடுத்திருக்கிறார் சீமான். கூடவே, 'வாக்காளர் சிறப்புத் திருத்தம்' என்ற பெயரில் வடமாநிலத்தவரை தமிழ்நாட்டு வாக்காளராக்கும் இன உரிமை பறிப்பை இந்திய அரசு உடனடியாகக் கைவிடவில்லை என்றால், தமிழரின் அரசதிகார உரிமையைப் பாதுகாக்க நாம் தமிழர் கட்சி மாபெரும் மக்கள் திரள் போராட்டங்களை முன்னெடுக்கும் என்றும் சீமான் எச்சரித்துள்ளார்.