முதலமைச்சரை சந்தித்த சீமான் pt web
தமிழ்நாடு

“பாதை வெவ்வேறு; பாசம் ஒன்றுதானே” - மு.க.முத்து மறைவு.. சீமான் நேரில் ஆறுதல்

முதலமைச்சர் ஸ்டாலினின் சகோதரர் முக முத்து உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முதலமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

PT digital Desk

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனும் முதல்வர் ஸ்டாலினின் சகோதரருமான முக முத்து உடல்நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள முதலமைச்சரின் இல்லத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, மு.க.முத்து மறைவுக்கு ஆறுதல் தெரிவித்த நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

பின் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “மு க முத்து மறைவுச் செய்தி பெருந்துயரம். செய்தி அறிந்ததும் இரங்கல் அறிக்கை வெளியிட்டேன். துயரத்தை பகிர்ந்து கொள்வதற்காக சென்னை வர நினைத்தேன். ஆனால், நான் வருவதற்குள் அடக்கம் செய்து விட்டார்கள். அதனால் இன்று முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இருவரையும் சந்தித்து வருத்தத்தை பகிர்ந்து கொண்டேன். ஆறுதலை தெரிவித்துக் கொண்டேன். ஏழு வருடங்களாக உடல்நிலை சரியில்லை என்று சொல்கிறார்கள்; எப்படியிருந்தாலும் இழப்பு என்பது பெருந்துயரம்தான்.

அரசியல், கொள்கை நிலைப்பாடுகள், பாதை, பயணம் வெவ்வேறாக இருந்தாலும் பாசம் என்பது ஒன்றுதானே. நான் ஒருமுறை நீண்ட நேரம் வெயிலில் பசியோடு நின்று இருந்தபோது மயங்கி விழுந்துவிட்டேன். அப்போது, முதலமைச்சர் என்னை உடனே அழைத்து உடலை சரியாக பார்த்துக்கொள்வது இல்லையா என்றெல்லாம் விசாரித்தார். அப்பா இறந்தபோதும் என்னை அழைத்துப் பேசினார். அவையெல்லாம் அரசியலுக்கு அப்பாற்பட்ட மனிதமாண்பு” எனத் தெரிவித்தார்.