விஜய், சீமான் pt web
தமிழ்நாடு

"திரைப்பட வசனம்.. விஜய் கூறியது சிறுபிள்ளைத்தனம்" - சீமான்

விஜயின் வெளியிட்ட வீடியோவிற்கு அரசியல் ஆய்வாளர்களும் விமர்சகர்களும் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வரும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜயின் வீடியோ குறித்துப் பேசியிருக்கிறார்.

PT digital Desk

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கியதில் இருந்தே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக விஜய்க்கு ஆதரவாகப் பேசி வந்தார். விஜய் கொள்கைத் தலைவர்களை அறிவித்ததில் இருந்து அவரோடு முரண்பட்டு தொடர்ச்சியாக விமர்சித்தும் வந்தார். அதேபோலதான் கரூர் சம்பவத்திலும் சீமான் விஜய்க்கு ஆதரவான முறையிலேயே பேசியிருந்தார். ஆனால் கடந்த செவ்வாய்க்கிழமை விஜய் வெளியிட்ட வீடியோவிற்கு சீமான் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். என்ன பேசியிருக்கிறார் ? விரிவாகப் பார்க்கலாம்.

கரூர்

விஜயின் கரூர் பிரச்சாரத்தின்போது 41 அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போதே விஜய் சென்னை புறப்பட்டார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் சென்ற நிலையில், சம்பவம் நடந்து 3 மணி நேரம் கழித்து தனது வருத்தத்தை தெரிவித்து ட்வீட் செய்திருந்தார்.

விஜய் பேசியது என்ன?

பல்வேறு கட்சியினரும் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து வரும் நிலையில் தவெக சார்பில் ஒரு நிர்வாகிகூட பாதிக்கப்பட்டவர்களை சந்தித்ததாகத் தெரியவில்லை. இந்த நிலையில்தான் சம்பவம் நடந்த மூன்றாம் நாள் அதாவது கடந்த செவ்வாய்கிழமை விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் பேசிய அவர் தனது வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு வழி மிகுந்த தருனத்தை தான் சந்தித்ததே இல்லை என்றும் மனசு முழுக்க வலியில் இருப்பதாகவும் கூறியிருந்தார். மேலும், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினைக் குறிப்பிட்டு பேசிய அவர், “CM சார், பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், அவர்கள் மேல் கை வைக்காதீர்கள். நான் எனது வீட்டில் இருப்பேன் அல்லது அலுவலகத்தில் இருப்பேன். என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்,” என்று பேசியிருந்தார். விஜயின் இந்தப் பேச்சுக்கு அரசியல் ஆய்வாளர்களும் விமர்சகர்களும் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வரும் நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜயின் இந்த வீடியோ குறித்துப் பேசியிருக்கிறார்.

சீமான் கடும் தாக்கு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் வெளியிட்ட வீடியோ குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்துப் பேசிய அவர், "விஜய் பேசியது திரைப்பட வசனம் போல இருக்கிறது. இது நல்ல அணுகுமுறை அல்ல. சிஎம் சார் எனச் சொல்வதே சின்னப்பிள்ளை பேசுவது போல இருக்கிறது. விஜய் வீடியோவை பார்க்கும்போது அவரது இதயத்தில் வலியோ, காயமோ இல்லை. இருந்திருந்தால் அவரது மொழியில் அது வெளிப்பட்டு இருக்கும். உருக்கமாக பேசி விஜய் வீடியோ வெளியிட்டிருக்க வேண்டும்.

இந்த நிகழ்வைப் பொறுத்தவரை விஜய் அந்த இடத்துக்கு பரப்புரைக்குச் சென்றதால்தான் நிகழ்ந்தது. அவர் போகவில்லை என்றால் இது நடந்திருக்காது. அப்படி என்றால் காரணம் யார்? மற்ற இடங்களில் எல்லாம் நடக்கவில்லை என்று சொல்கிறீர்கள் என்றால், அங்கும் நடந்திருக்க வேண்டும் என்கிறீர்களா? எல்லா கூட்டத்திலும் மயங்கி விழுந்தார்கள்; இங்கு கூட்ட நெரிசல் அதிகம் என்பதால் மிதித்து பலர் பலியாகினர்.

கூட்டத்துக்குள் ஆள் புகுந்தார்கள், கத்தியால் குத்தினார்கள் என்கிறீர்கள். நான் மருத்துவமனைக்குச் சென்று பார்த்தேன். ஒருவருக்கு கூட கத்தியால் குத்திய காயம் இல்லை. மிதித்ததில்தான் பலருக்கும் காயம். விஜயிடமே தண்ணீர் கேட்டார்கள். அவர் தண்ணீர் பாட்டிலை தூக்கிப் போடுகிறார். ஒருவரின் தேவைக்கு போடுகிறார், ஆனால் சுற்றி இருக்கும் அனைவருக்கும் தாகம் தானே? திரைக் கவர்ச்சி நாட்டை ஆள முயற்சிக்கிறது. திரை மயக்கம், திரை போதையில் உள்ளனர். விஜய்க்கு சுய சிந்தனை இருக்கிறது என்றால் எதற்கு அருகில் ஆள் இருக்க வேண்டும்? சிஎம் சார் என விஜய் கூறியது சிறுபிள்ளைத்தனம்”, எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

விஜய் வெளியிட்டுள்ள வீடியோ கடுமையான விமர்சனத்தைப் பெற்று வரும் நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜயைக் கடுமையாக சாடியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.