Seeman
Seeman pt desk
தமிழ்நாடு

”அதான் எல்லா துறையும் இருக்கே.. கர்நாடக பாஜக ஊழலையும் தம்பி அண்ணாமலை வெளியிடட்டும்” - சீமான்

Kaleel Rahman

சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த நாம் தமிழர் கட்சியின தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம் ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்று வருகிறது என செய்தியாளர்கள் கேட்டதற்கு,

அவர்கள் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று நடத்துகிறார்கள். பேரணி என்றால் அதில் ஒரு நோக்கம் இருக்க வேண்டும், அவர்கள் வலுக்கட்டாயமாக நடத்த வேண்டும் என்பதற்காக நடத்துகிறார்கள். அதில் ஒன்றும் பெரிய செய்தி இல்லை என்றார்.

பரந்தூர் விமான நிலையம் தொடர்பான போராட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவாக நாங்க இருக்கிறோம். இருக்கிற வானூர்தி நிலையங்களிலே, பறப்பதற்கு வானூர்தி இல்லாத நிலையில், புதிதாக விமான நிலையம் எதற்கு? சொந்தமாக வானூர்தி இல்லாத நாட்டிற்கு எதற்கு வானூர்தி நிலையம்? நகைச்சுவையாக இல்லையா?

முன்னோர்கள் விலை நிலங்களாக மாற்றுவதற்கு அதிக விலை கொடுத்து இருக்கின்றனர். முதலில் வானூர்தியை கொண்டு வாருங்கள் பிறகு பேசுவோம். சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள வானூர்தி நிலையம் போதவில்லை என போராடினார்களா.? வசதி குறைவாய் இருக்கிறது என்று சொன்னார்களா.? மக்களின் போராட்ட உணர்வை புரிந்து கொண்டு அரசு இந்த செயலை கைவிட வேண்டும் என சீமான் கூறியிருக்கிறார்.

இதனையடுத்து, மீன்பிடித் தடை காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளதே என்ற கேள்விக்கு, ”நாங்கள் கேட்காததை கொடுக்கிறார்கள் கேட்பதை கொடுப்பதில்லை.. எங்கள் பெண்கள் வீதியில் வந்து இலவச பஸ் பாஸ் கேட்டார்களா? குடும்ப அட்டைக்கு ஆயிரம் ரூபாய் வேண்டும் என கேட்டார்களா? கேட்காதது எல்லாம் கொடுக்கிறார்கள். ஆனால் மீன்பிடித் தடை காலத்தில் மீனவர்களுக்கு கொடுக்கும் உதவி தொகை போதவில்லை என கேட்கிறார்கள் அதை அரசு கொடுக்க வேண்டும்.” என்றார்.

அடுத்ததாக, அண்ணாமலை அனைத்து கட்சியின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன் என கூறியது குறித்து கேள்விக்கு, ”மற்ற கட்சியை போல அவர்கள் கட்சியின் ஊழல் பட்டியலையும் கூட்டணி கட்சியின் ஊழல் பட்டியலையும் வெளியிட வேண்டும். கர்நாடகா பாஜக ஊழல் பட்டியலையும் வெளியிட வேண்டும். தம்பி ஒவ்வொன்றாக செய்வார் என்று நினைக்கிறேன். ஆனால், ஊழல் பட்டியலை வெளியிடுவதில் பயனில்லை. நடவடிக்கை எடுக்கணும். வருமானவரித் துறை, அமலாக்கத் துறையும் உங்களிடம்தான் இருக்கிறது. ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை அதனால் இந்த செய்தி எனக்கு வேடிக்கையாக இருக்கிறது.” என பதிலளித்திருக்கிறார் சீமான்.

லண்டனில் வைக்கப்பட்டுள்ள பென்னி குக் சிலைக்கு முழுமையாக பணம் செலுத்தாததால் கருப்புத் துணியால் மூடப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, ”பென்னி குக் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். போற்றுதலுக்குரிய பெருந்தகை. அவருக்கு அரசு உரிய தொகையை செலுத்தி கருப்பு துணியை அகற்ற செய்வதுதான் அதற்குரிய பெருமையாக இருக்கும். அதை அரசு செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.

தமிழக மீனவர் பிரச்னை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ”அவர்களுக்கு இந்தி பேசுபவர்கள் மட்டும்தான் இந்தியர்கள். அவர்களுக்கு எங்களுடைய நிலம், வளம், எல்லாம் தேவைப்படுகிறது. வருமனம் தேவைப்படுகிறது. ஆனால், எங்களுடைய உணர்வு, உயிர் உரிமையை எல்லாம் இந்த ஆட்சியாளர்களுக்கு பொருட்டே கிடையாது. அதான் பிரச்னை. வட இந்திய தொழிலாளர்கள் தமிழகம் வருவது வயிற்றுப் பசிக்காக பாவம் என கூறுகின்றனர். நாங்கள் மீன் பிடிக்க வசதி வாய்ப்புக்காகவா போகிறோம்?

சாவது தமிழனாக இருந்தால் சகித்துக் கொள்ளலாம், லட்சக்கணக்கானோர் கடலுக்குள் செத்தாலும், ஆந்திரா காட்டுக்குள் செம்மரக் காட்டுக்குள் செத்தாலும், சகித்துக் கொள்ளலாம் இப்படிதான் நிலைமை இருக்கிறது” என கூறினார்.