30 ஆண்டுகள் சிறை.. சந்தன கடத்தல் வீரப்பனின் கூட்டாளி மீசை மாதையன் பெங்களூரு மருத்துவமனையில் மரணம்!

வீரப்பன் கூட்டாளி மீசைக்கார மாதையன், வயது முதிர்வு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Meesai Mathaian
Meesai Mathaianpt desk

வீரப்பன் கூட்டாளிகளில் முக்கியமானவர் மாதையன். இவருடைய குடும்பத்துக்கும், வீரப்பன் குடும்பத்துக்கும் பங்காளி உறவு. மீசை மாதையன் குடும்பமே வீரப்பனுக்கு விசுவாசமாக இருந்துள்ளது. இவரது தம்பி சாமிநாதன், முனியன், சுண்டா வெள்ளையன், மகன் மாதேஷ் ஆகியோர் வீரப்பன் சந்தனமரம் வியாபாரம் செய்த நேரத்தில் அவருடைய குழுவில் இருந்துள்ளனர்.

பிறகு, போலீஸ் தேடுதலுக்குப் பயந்து காட்டுக்குள்ளேயே தலைமறைவாக இருந்தனர். இதில், சாமிநாதன் மட்டும் 1991-இல் DCF ஸ்ரீநிவாஸ் அவர்களிடம் சரணடைந்தார். 1993-இல், முனியன், சுண்டா வெள்ளையன் இருவரும் போலீசாரிடம் சரணடைந்த பின் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1998 மீசைக்கார மாதையனின் மகன் மாதேஷ் சத்தியமங்கலம் காட்டில் உள்ள புளியங்கோம்பை என்ற ஊரில் தமிழ்நாடு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் மோகன் நவாஷால் சுட்டுக் கொல்லப்பட்டார். 1993-இல் வீரப்பன் குழுவில் இருந்து செங்கப்பாடிக்கு தப்பி வந்த மீசை மாதையன் கர்நாடக போலீசில் சரணடைகிறார். அவர் மீது நான்கு தடா வழக்குகள் பதியப்பட்டது. விசாரணை முடிவில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

மேல் முறையீட்டு மனு விசாரணைக்குப் பின்னர், உச்ச நீதிமன்றம், மீசை மாதையன், பிலவேந்திரன், சைமன், ஞானப்பிரகாசம் ஆகிய நால்வரின் ஆயுள் தண்டனையை தூக்கு தண்டனையாக மாற்றியது. இதை எதிர்த்து ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பப்பட்டது. அப்போதைய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மனுவை தள்ளுபடி செய்தார். இதையடுத்து நால்வரையும் தூக்கிலிடும் நாள் குறிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் மனுவை முறையான காலத்தில் பரிசீலனை செய்து முடிக்கவில்லை என்ற சமூக ஆர்வலர்களின் கடுமையான போராட்டத்தோடு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின்னர், குடியரசுத் தலைவர், கருணை மனுவை ஒன்பது ஆண்டு காலம் ஆய்வுக்கு உட்படுத்தாமல் வைத்திருந்த காரணத்தால் இந்த நால்வரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து தலைமை நீதியரசர் சதாசிவம், ரஞ்சன் கோகாய், சிவகீர்த்தி சிங் தலைமையிலான முதல் அமர்வு ஒரு சிறப்பான தீர்ப்பை வழங்கினர்.

ஜனவரி 2014 இல் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டாலும், கர்நாடக மாநில அரசும் சிறைத்துறையும் இந்த நால்வரையும் விடுதலை செய்யாமலே சிறையில் வைத்திருந்தனர். இதையடுத்து 2018, மே மாதம், சைமன் என்பவரும், 2022, இல் பிலவேந்திரனும் சிறைக்குள்ளேயே உயிரிழந்தனர். 2023 பிப்ரவரியில் சிறுநீரகம் பழுதான ஞானபிரகாசம், பரோலில் வெளியே வந்தார். 31 ஆண்டுகளாக மைசூர் சிறையிலிருந்த, மீசை மாதையன் கடந்த 11 ஆம் தேதி அதிகாலை உடல்நலம் பாதிக்கப்பட்டு, நினைவிழந்த நிலைக்குச் சென்றார்.

முதல் கட்டமாக மைசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், நேற்று மாலை மூன்று மணிக்கு நினைவு திரும்பாமலேயே மீசை மாதையன் உயிரிழந்தார். வீரப்பன் கூட்டாளிகள் என்ற பெயரில் சிறையிலிருந்த கடைசி நபர் இந்த மீசைக்கார மாதையன் என்பது குறிப்பிடத்தக்கது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com