சீமான் - விஜய் web
தமிழ்நாடு

"அண்ணன் பேச்சை ஒருமுறை கேளு" - விஜய்க்கு சீமான் அட்வைஸ்!

தவெக தொண்டர்கள் சிறு பிள்ளைகள் என செய்தியாளர் சந்திப்பில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம்.

PT WEB

தமிழக வெற்றிக் கழகத்தையும், அக்கட்சியின் தலைவர் விஜயையும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபகாலங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதற்கு தவெக தலைவர் விஜயிடம் இருந்து எந்த எதிர்வினையும் இல்லை என்றாலும், சமூக ஊடகங்களில் சீமானின் மீது கடுமையான விமர்சனங்களை தவெக தொண்டர்கள் முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், சீமான் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பாக விளக்கமளித்துப் பேசியிருக்கிறார்.

சீமான், பா. சிவந்தி ஆதித்தனார்

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 90-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது நினைவு இல்லத்தில், பா.சிவந்தி ஆதித்தனாரின் உருவப்படத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பா.சிவந்தி ஆதித்தனார் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து, அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது, தாய் பாசம் உள்ள தலைவனை இழந்து தவிக்கும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தர வேண்டும்? என்று நாகையில் விஜய் பேசிய கருத்திற்கு பதிலளித்து பேசிய அவர், "என் தம்பி விஜய் திடீரென்று மீனவர்கள், ஈழத்தமிழர்கள் பற்றி பேசுவது மோடி தமிழில் திருக்குறள் சொல்வதுபோல உள்ளது. உண்மையாக அவருக்கு ஈழத்தமிழர்கள் குறித்து வலி இருந்திருந்தால் அது முதல் மாநாட்டிலேயே பேசியிருக்க வேண்டும்" என்று கூறினார்.

விஜய், சீமான்

தொடர்ந்து, "நாகையில் இந்திய மீனவர்கள் என ஏன் குறிப்பிடுவதில்லை? தமிழக மீனவர்கள் என ஏன் அழைக்கிறீர்கள் என விஜய் கேட்டார். ஆனால், முதன் முதலில் அந்த கேள்வியை எழுப்பியதும் மீனவர்களுக்காக ஆறு மாத காலம் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் இருந்தவனும் நான்” எனக் குறிப்பிட்டார்.

”அடுத்தவன் பேச்சை கேட்காதே அண்ணன் பேச்சை ஒருமுறை கேளு”

நாம் தமிழர் கட்சி தொடர்ந்து விஜயை எதிர்த்து வலுவான கருத்துகளை முன்வைப்பது குறித்தான கேள்விக்கு பதிலளித்த அவர், “விஜய் மேல் இருக்கும் அக்கறையில்தான் நான் அவரின் கருத்துகளை விமர்சித்து வருகிறேன். நாளைக்கே வேறு யாருக்காவது அவரை எதிர்க்க வேண்டிய சூழ்நிலை வந்தால் இந்த விமர்சனத்தையே அவரின் மீது வைப்பார்கள். அதனாலேயே, அடுத்தவன் பேச்சை கேட்காதே அண்ணன் பேச்சைக் ஒருமுறை கேளு.. உனக்கு எழுதி கொடுப்பவர்கள் தப்பு தப்பாக எழுதிக் கொடுக்கிறார்கள் என்று சொல்கிறேன். அது அவருக்கு புரியவில்லை” எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து தவெக தொண்டர்கள் நாம் தமிழர் கட்சியினரை கடுமையாக விமர்சித்து வருவது ஏன் என்ற கேள்விக்கு, தவெக-வினர் சிறு பிள்ளைகள் அவர்கள் முதலில் பக்குவப்பட வேண்டும்.. கருத்தை கருத்தால் மோத அவர்களுக்கு தெரியவில்லை எனக் கூறினார்.