ராமதாஸ் - குருமூர்த்தி pt web
தமிழ்நாடு

குருமூர்த்தி - ராமதாஸ்.. ஒரே வாரத்தில் இரண்டாவது சந்திப்பு! சுற்றி எழும் கேள்விகள்

பாமகவில் உட்கட்சி மோதல் நிலவி வரும் சூழலில், துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியை பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரேவாரத்தில் இரண்டாவது முறையாக சந்தித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

PT WEB

பாமகவில் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி இடையே கருத்து வேறுபாடு நிலவி வரும் சூழலில், இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், கடந்த 5ஆம் தேதி தைலாபுரம் இல்லத்தில் ராமதாசை துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்தார். சில மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பு வெறும் நட்பு ரீதியிலானது என குருமூர்த்தி தெரிவித்திருந்தார்.

அன்புமணி - ராமதாஸ்.

இந்த நிலையில், சென்னை வந்திருந்த ராமதாஸ், ஆடிட்டர் குருமூர்த்தியை மீண்டும் சந்தித்து பேசியுள்ளார். சென்னை தி.நகரில் உள்ள முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தியின் மகன் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது. இருவரிடையேயான சந்திப்பு முடிந்த பிறகு முதலில் ஆடிட்டர் குருமூர்த்தி சென்ற நிலையில், பின்னர் ராமதாஸ் காரில் புறப்பட்டார். அப்போது அவரிடம் குருமூர்த்தியுடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தைலாபுரத்தில் இதற்கான விளக்கம் தருவதாக தெரிவித்துள்ளார்.

ராமதாஸ், குருமூர்த்தி இடையேயான சந்திப்பு ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற போது, ராமதாசின் வாகனம், பலத்த பாதுகாப்புடன் சென்னை சாலைகளில் வலம் வந்ததாக சொல்லப்படுகிறது. பாமகவில் உட்கட்சி பூசல் நிலவும் சூழலில், பாஜக கூட்டணிக்குள் பாமகவை கொண்டு வரும் நோக்கில் பல கட்ட முயற்சிகள் நடப்பதாக கூறப்படும் நிலையில், ஒரேவாரத்தில் ராமதாஸ், குருமூர்த்தி இடையேயான சந்திப்பு இரண்டு முறை நடந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.