அண்ணா அறிவாலயம் Pt web
தமிழ்நாடு

IUML, MMK கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள்.. ஸ்டாலின் முன்னிலையில் உடன்பாடு!

திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி (IUML) மற்றும் மனிதநேய மக்கள் கட்சி (MMK) ஆகியவற்றிற்கு 2 தொகுதிகளை திமுக ஒதுக்கியிருக்கிறது. இதற்கான ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தாகியுள்ளது.

Premkumar S

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக இன்னும் ஓரிரு வாரங்களே உள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை வேகமெடுத்திருக்கிறது. இதற்காக, டி.ஆர்.பாலு தலையிலனான 7 பேர் கொண்ட குழுவை அமைத்த திமுக, கடந்த 22ஆம் தேதி தேதி முதல் விசிக, தேமுதிக உள்ளிட்ட ஒரு சில கட்சிகளைத் தவிர பாதிக்கும் மேற்பட்ட கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையை முடித்திருக்கிறது. இந்தச் சூழலில்தான், இன்று இந்திய யூனியம் முஸ்லீம் லீக் கட்சி (IUML) மற்றும் மனித நேய மக்கள் கட்சி (MMK) ஆகியவற்றுடன் இன்று இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் முடிவில், இரு கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளை திமுக ஒதுக்கியிருக்கிறது. இதற்கான ஒப்பந்தமும் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகியிருக்கிறது.

திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின் முதல்நாளே, இவ்விரு கட்சிகளும் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற நிலையில், 5 தொகுதிகளை கேட்டிருந்தன. ஆனால், IUML மற்றும் MMK ஆகிய கட்சிகளுக்கு 2 தொகுதிகளே ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த தேர்தலில், IUML கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த முறை 1 குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், MMK கடந்த தேர்தலில் போட்டியிட்டதுபோலவே இந்த தேர்தலிலும் 2 இடங்களில் போட்டியிட இருக்கிறது.

தொகுதிப் பங்கீட்டிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த IUML கட்சியின் தலைவர் காதர் மொகிதீன், “2021 தேர்தலில் கொடுத்தபடியே 3 தொகுதிகளைக் பேச்சுவார்த்தையில் கேட்டிருந்தோம். புதிதாக நிறைய கட்சிகள் திமுக கூட்டணியில் இணைந்துள்ளதால், 1 தொகுதியை குறைத்துக்கொள்ள கூறியிருந்தார்கள். அதன்படியே இன்று 2 தொகுதிகளுக்கு உடன்படக் கூறினார்கள். நாங்களும் அதற்கு ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டிருக்கிறோம். அதேசமயம், 1 தொகுதியை தமிழ்நாட்டில் குறைத்துக் கொண்டதால் பாண்டிச்சேரியில் 1 தொகுதியைக் கேட்டிருக்கிறோம். ’நல்ல முடிவை கூறுகிறோம்’ எனத் தெரிவித்திருக்கிறார்கள். நாங்கள் தேசியக் கட்சி என்பதால் ஏணி சின்னத்தில்தான் போட்டியிடவுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்ததாக மமக தலைவர் ஜவஹிருல்லா பேசுகையில், ” திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு தொகுதிப் பங்கீடு கையெழுத்தாகியிருக்கிறது. அதன்படி, மமக 2 தொகுதிகளில் போட்டியிட உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது. அதேசமயம், இந்த 2 தொகுதிகள் மட்டுமின்றி, 234 தொகுதிகளில் மமக தொண்டர்கள் திமுக கூட்டணி வெற்றி பெற பணிபுரிவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.