சென்னையில் 37 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள், பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் உத்தரவாதத்தை ஏற்று தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்றனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி போராட்டம் நடத்தி வந்த இவ்வாசிரியர்கள், மூவர்குழு அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்யும் வரை போராட்டத்தை நிறுத்தியுள்ளனர்.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அறிவுறுத்தலை ஏற்று, சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.
சம வேலைக்கு சமஊதியம் வழங்கக்கோரி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் டிசம்பர் 26ஆம் தேதி முதல் சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
பள்ளிக்கல்வித்துறை அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை மேற்கொண்டு வந்தனர். 37 நாட்களாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தி இருந்தார். ஏற்கெனவே ஊதிய முரண்பாடு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட மூவர்குழு, அறிக்கையை விரைந்து அரசிடம் தாக்கல் செய்யும் என்றும், அதனடிப்படையில் அடுத்தகட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.
இதையடுத்து, அமைச்சரின் உத்தரவாதத்தை ஏற்று, போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள்இயக்கம் அறிவித்தது.