சட்டமேதை பாபாசாகேப் அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தான், அமைச்சரவையில் இட ஒதுக்க வேண்டும் எனவும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வலுவாக குரலெழுப்ப வேண்டிய நேரம் இது எனவும் எம்.பி-யும் விசிக பொதுச்செயலாளருமான ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளில் நாம் எழுப்ப வேண்டிய கோரிக்கை `அமைச்சரவையிலும் இட ஒதுக்கீடு’ எனத் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து அது குறித்தான கட்டுரை ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அக்கட்டுரையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்டியல் சமூகத்தினருக்கென இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 44 இடங்கள் பட்டியல் வகுப்பினருக்கும், 2 இடங்கள் பழங்குடியினருக்கும் என இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டிருக்கிறது. இது, மொத்த எண்ணிக்கையில் 20% சதவீதம் ஆகும். ஆனால், அமைச்சரவையில் அவர்கள் 5-ல் ஒரு பங்கு கூட இல்லை. ஏனென்றால், சட்டப்பேரவை உறுப்பினராவதற்கு மட்டுமே இட ஒதுக்கீடு உள்ளது. அமைச்சரவையில் இடம்பெறுவதற்கு இடஒதுக்கீடு இல்லை.
’தாழ்த்தப்பட்ட மக்கள் சட்டப்பேரவையில் இடங்களை பெறுவதன் மூலம் அரசாங்க நடவடிக்கைகளில் செல்வாக்கு செலுத்தும் அதிகாரத்தைப் பெற்றிருப்பது எப்படி அவசியமோ, அதேபோல், அரசாங்கத்தின் பொதுக்கொள்கையை வகுக்கும் வாய்ப்பை அவர்கள் பெற்றிருப்பது அவசியம்’ என அம்பேத்கர் தெரிவித்துள்ளார்.
1942 ஆம் ஆண்டு பட்டியல் சமூக மக்களின் அனைத்திந்திய மாநாடு நடைபெற்றது. அதில், பேசிய மகாத்மா காந்தி, அமைச்சர் என்பவர் அனைவரின் நம்பிக்கையையும் பெற்ற உயர்ந்த மனிதராக இருத்தல் வேண்டும். சட்டப்பேரவையில் இடம்பெற்ற பிறகு, அமைச்சரவையில் இடம்பெற தங்கள் தகுதிகளையும், மக்கள் செல்வாக்கையும் பெற்றிருத்தல் வேண்டும் என தெரிவித்தார். அதற்கு, பதிலளித்த அம்பேத்கர், தேர்தலில் வேட்பாளர்களை சாதி அடிப்படையில் தேர்ந்தெடுக்க வேண்டும் என அம்பேத்கர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து, தீண்டப்படாதவர்களைப் பொறுத்தவரை தகுதியுள்ளவர்களைக் காட்டிலும், தகுதியில்லாதவர்களே தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதை அம்பலப்படுத்தினார். இதனாலேயே, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அமைச்சரவையில் இடங்களை பெற முடியாமல் போனது. இதை மாற்றுவதற்கு, அமைச்சரவையிலும் தமக்குரிய இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குரலெழுப்ப வேண்டிய நேரம் இது எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.