”தமிழ்நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல போராடுகிறேன்" - திருவள்ளூர் பரப்புரையில் மு.க.ஸ்டாலின்!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகளிடையே நான்கு முனைப் போட்டி நிலவிவருகிறது. தொடர்ந்து, 2ஆவது முறையாக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் ஆளும் திமுக கூட்டணி தேர்தல் பணிகளில் முனைப்புடன் செயல்பட்டு வரும் வேளையில், முதல்வர் ஸ்டாலின் மாவட்டம்தோறும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில், இன்று திருவள்ளூரில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளின் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், ”தமிழகத்தின் காவல் தெய்வங்கள் வடக்கு நோக்கிதான் உட்கார்ந்திருக்கும். தமிழகத்திற்கு ஆபத்து வடக்கில் இருந்துதான் வருகிறது. அப்படி எதிர் வரக்கூடிய என்டிஏ என்ற ஆபத்தை தடுத்து நிறுத்தக்கூடிய தேர்தல்தான் இந்த தேர்தல். தமிழ்நாட்டை காக்க நீங்கள் எல்லாம் தயாராக இருக்க வேண்டும். என்.டி.ஏ-க்கு எப்போதும் தமிழ்நாட்டில் நோ என்ட்ரீதான்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ”எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி ஆட்சியில், தமிழகம் 0.7% வளர்ச்சியையேப் பெற்றிருந்தது. இப்போது, திமுக ஆட்சியில் 11.19% வளர்ச்சி. தமிழ்நாடு இந்தியாவுக்கே ரோல் மாடலாக இருக்கிறது. பாஜகவின் கிளை கழகம்தான் அதிமுக. பழனிசாமி என்ற அடிமை இருப்பதால் தான், ’இந்தியை திணிப்போம்’ என பாஜவினர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். 10 தோல்வி பழனிசாமியை 11 தோல்வி பழனிசாமின்னு அப்டேட் பண்ணிடலாம்.
ஆவடியில், தான்யா என்ற சிறுமிக்கு புதுவிதமான நோய் ஏற்பட்டது. என் குழந்தைபோல் நினைத்து அறுவைசிகிச்சை செய்து, பார்த்துப் பார்த்து சரி செய்தோம். ஒவ்வொரு செயலிலும் தமிழகத்தை முன்னோக்கிச் செல்ல போராடிக் கொண்டிருக்கிறேன்.
போராடிக் கொண்டுதான் சாவேன். சவால் விட்டுப் பேசுகிறேன் ஸ்டாலின் உயிரோடு இருக்கும்வரை, திமுக இருக்கும் வரை தமிழ்நாட்டை பாஜகவால் தொட்டுக்கூட பார்க்க முடியாது” எனத் தெரிவித்தார்.
