ATM Theft
ATM Theft pt desk
தமிழ்நாடு

கிருஷ்ணகிரி: SBI ATM இயந்திரத்தை உடைத்து ரூ.10 லட்சம் கொள்ளை

webteam

செய்தியாளர்: ஜி.பழனிவேல்

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி மேம்பாலம் அருகே, எஸ்பிஐ வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று மாலை ஏடிஎம் மையத்தை பராமரிக்கும் ஊழியர்கள், வழக்கம்போல் ஏடிஎம் இயந்திரத்தில் சுமார் ரூ.16 லட்சம் பணத்தை நிரப்பிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை ஏடிஎம் மையத்திற்கு வந்த மர்ம நபர்கள், சிசிடிவி கேமராக்கள் மீது கருப்பு நிற ஸ்ப்ரே அடித்து விட்டு, வெல்டிங் மிஷின் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர்.

SBI ATM

இதுதொடர்பாக அதிகாலை 4 மணியளவில் ஏடிஎம் மையத்தை பராமரிக்கும் கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் சென்றுள்ளது. கட்டுப்பாட்டு மையத்திலிருந்து கட்டடத்தின் உரிமையாளரை தொடர்பு கொண்டு ஏடிஎம் மையத்தை பார்க்குமாறு தெரிவித்துள்ளனர். அதன்பேரில் அவர் அங்கு சென்று பார்த்தபோது கொள்ளை சம்பவம் நடந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து தகவலறிந்த குருபரப்பள்ளி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, ஏடிஎஸ்பி சங்கு ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்ததோடு, சிசிடிவி பதிவுகளை வைத்தும் ஆய்வு செய்து வருகின்றனர். ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த மர்ம நபர்கள் அதிலிருந்து ரூ.10 லட்சத்திற்கும் மேல் கொள்ளையடித்துச் சென்றிருக்க வாய்ப்புள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

SBI ATM Theft

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க காவல்துறை தரப்பில் 5 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறது. இச்சம்பவம் கிருஷ்ணகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.