தமிழ்நாடு

"சசிகலா முன்கூட்டியே விடுதலையாவார்" - வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன்

jagadeesh

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா, வரும் ஜனவரி 27ல் விடுதலையாகவுள்ளார் என தகவல் வெளியான நிலையில், அவர் முன்கூட்டியே விடுதலையாவதற்கு வாய்ப்பு இருப்பதாக வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

புதிய தலைமுறைக்கு தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த அவர் "பிப்.14இல் சசிகலா விடுதலை செய்யப்படவேண்டும். சசிகலா 17 நாட்கள் மட்டுமே அவர் பரோலில் வெளியே வந்துள்ளார். மொத்தம் 35 பரோல் நாட்கள் இருப்பதால் மீதம் 18 நாட்கள் உள்ளன. பிப்.14 இல் இருந்து 18 நாட்களை கழித்தால் ஜன.27 இல் சட்டப்படி விடுதலை.‌ ஆனால் நன்னடத்தை விதிகளின் படி இம்மாத இறுதியிலேயே சசிகலா வெளியே வருவார்" என்றார் ராஜா செந்தூர் பாண்டியன்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்த நிலையில், சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் கடந்த 2017 பிப்ரவரி 14 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் சசிகலாவை குற்றவாளி என அறிவித்து தீர்ப்பளித்தது. அதன்படி அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து கர்நாடக தலைநகர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த நரசிம்மமூர்த்தி என்பவர், சசிகலா எப்போது சிறையிலிருந்து விடுதலையாவார் என தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள சிறை நிர்வாகம், சசிகலா அபராதத்தை செலுத்திவிட்டால் வரும் ஜனவரி 27 ஆம் தேதி விடுதலையாவார் என்றும், மாறாக அபராதத்தை செலுத்த தவறினால் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி சசிகலா விடுதலையாவார் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், சசிகலா பரோல் வசதியை பயன்படுத்தினால் விடுதலை தேதி மாறுபடவும் வாய்ப்புள்ளதாகவும் சிறை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.