அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே சசிகலா ஆங்கில புத்தாண்டையொட்டி, சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் கூடியிருந்த அவருடைய ஆதரவாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து, செய்தியார்களை சந்தித்துப் பேசிய அவர், “இந்த புத்தாண்டில் மன்னராட்சி ஒழிந்து மக்களாட்சி மலரும் ஆண்டாக இருக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். சட்ட ஒழுங்கு சுத்தமாக சரியாக இல்லை என்பது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது. இரண்டு நாட்களுக்கு முன்பே திருத்தணி ரயில் நிலையத்தில் வட மாநில இளைஞரை நான்கு சிறுவர்கள் கத்திய வைத்து மிரட்டி காயப்படுத்தி உள்ளார்கள். இதுபோன்று எப்போது நடந்தது இல்லை. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தொடர்ந்து இந்த மாதிரியான நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மேலும், இதே திருத்தணியில் ரயில் நிலையத்தில் பட்டுப்புடவை வியாபாரியை சிறுவர்கள் அடித்து தொந்தரவு செய்து இருக்கிறார்கள். திருப்பூரில் கோவில் திருவிழாவில் கிட்டத்தட்ட 500 பேர் வரிசையில் சுவாமி தரிசனம் செய்ய நின்று கொண்டிருந்தபோது, பாதுக்காப்பிற்காக இருந்த காவல் அதிகாரி ஒருவரை போதையில் இருந்த வாலிபர் ஒருவர் கத்தியை வைத்து மிரட்டி அடிக்க முயற்சி செய்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும்போது காவல்துறை இப்படியா இருந்தது.? இப்போது எப்படி இருக்கிறது என்பதை அனைவருக்கும் தெரிகிறது. இதிலிருந்து முதல்வர் ஸ்டாலினுக்கு நிர்வாகம் செய்ய தெரியவில்லை என்பது தெரிகிறது. பட்டப்பகலில் நடக்கும் குற்றத்தை யாரிடம் சொல்வது. ரவுடியிசத்தை குறைக்க முடியவில்லை. மக்கள் தெளிவாக இருக்க வேண்டும். இந்த தேர்தலில், சரியான பாடத்தை திமுகவிற்கு கொடுத்தால் தான் தமிழ்நாடு வளர்ச்சி பக்கம் நோக்கி செல்வதை பார்க்க முடியும். அப்போதுதான், தமிழ்நாட்டிற்கு வெளிச்சம் கிடைக்கும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ” திமுகவினர் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் யாரும் வழங்கப்படும் என்று வாக்குறுதியில் சொல்லிவிட்டு தற்போது கொடுக்கப்படவில்லை. தூய்மை பணியாளர்களுக்கு வேலை தருவோம் என கூறினார்கள். ஆனால் அதையும் அவர்கள் செய்யவில்லை. தமிழ்நாட்டில் தொடர்ந்து ஆசிரியர்கள், செவிலியர்கள், அரசு ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் என பலரும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். திமுக அரசு வந்ததிலிருந்து போராட்டங்கள் மட்டும் தான் நடந்து கொண்டிருக்கின்றன.
ஆனால், திமுகவினர் ஒரு வேலையை மட்டும் சரியாக செய்து கொண்டிருக்கிறார்கள். அதாவது, கட்சி சம்பந்தப்பட்ட வேலையை அரசாங்கத்தில் இருந்து கொண்டு செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த திமுக ஆட்சிக்கு முடிவு கட்டுவதே என்னுடைய வேலை ” எனத் தெரிவித்துள்ளார்.