தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் 13 பேரும், திமுகவைச் சேர்ந்தவர்கள் 9 பேரும், ம.தி.மு.க. 2, காங் 1, எஸ்.டி.பி.ஐ. 1 மற்றும் சுயேட்சை உறுப்பினர்கள் 4 என 30 பேர் நகர்மன்ற உறுப்பினர்களாக இருக்கின்றனர்.
நகராட்சி தலைவருக்கான போட்டியில் திமுக கூட்டணிக்கு 15 அதிமுகவிற்கு 15 என சமமான வாக்குகள் பதிவானதால், குலுக்கல் முறையில் தி.மு.க.வினால் அறிவிக்கப்பட்ட உமாமகேஸ்வரி நகர் மன்ற தலைவராக அறிவிக்கப்பட்டார்.
ஆனால், உமா மகேஸ்வரி மீது டெண்டர் விவகாரம் மற்றும் மக்களின் அடிப்படை பிரச்சனைகளில் கவனம் செலுத்தாதது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, நகர் மன்றத்தில் உள்ள அதிமுக, திமுக, மதிமுக காங்கிரஸ் எஸ்டிபிஐ உள்ளிட்ட அனைத்து கட்சியைச் சார்ந்த நகர மன்ற உறுப்பினர்கள் 24 பேர் சேர்ந்து கடந்த மாதம் இரண்டாம் தேதி உமா மகேஸ்வரி மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வந்தனர்.
அதனைத் தொடர்ந்து அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இதில் திமுக நகர மன்ற தலைவிக்கு எதிராக 28 கவுன்சிலர்கள் வாக்களித்த நிலையில் தனது நகர் மன்ற தலைவியை பதவியை இழந்தார் திமுகவின் உமா மகேஸ்வரி. தொடர்ந்து இன்று நகர்மன்ற தலைவி அலுவலகம் சீல் வைக்கப்பட்டது.