Car
Car pt desk
தமிழ்நாடு

சேலம்: நிற்காமல் சென்ற காரை விரட்டிப் பிடித்த போலீசார் - சோதனையில் சிக்கிய புகையிலை பொருட்கள்

webteam

செய்தியாளர்: கே.தங்கராஜு

சேலம் மாவட்டம் ஓமலூர் வழியாக சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் புகையிலை மற்றம் போதைப் பொருட்களை கடத்துவதாக ஓமலூர் டி.எஸ்.பி சஞ்சீவ்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து உத்தரவின் பேரில், நெடுஞ்சாலை ரோந்து போலீசார் தொப்பூரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குஜராத் பதிவெண் கொண்ட கார் வந்தது. அந்த காரை தடுத்து நிறுத்தியும், நிற்காமல் வேகமாக சென்றது.

Accident

இதையடுத்து காரை பிடிக்க போலீஸ் வாகனத்தில் காவல்துறையினர் பின்தொடர்ந்து விரட்டி சென்றுள்ளனர். ஆனால், கார் ஓட்டுநர் போலீசாரிடம் சிக்காமல், வேகமாக காரை ஓட்டி வந்துள்ளார். இந்த நிலையில், காரை பிடிக்குமாறு கருப்பூர் சுங்கச்சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு பின்தொடர்ந்து காரை விரட்டி வந்துள்ளனர். இந்த நிலையில், புளியம்பட்டி ரவுண்டானா பகுதியில் தனியார் கொரியர் நிறுவன லாரி மீது மோதிய கார் பலத்த சேதமடைந்து நின்றது. இதையடுத்து காரில் வந்த 3 பேர் தப்பியோடினர்.

இதைத் தொடர்ந்து விபத்துக்குள்ளான காரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில், சுமார் 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் மூட்டையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், காரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதையடுத்து கடத்தல் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர்.

Police station

முன்னதாக தமிழ்நாட்டிற்கு போதைப் பொருட்கள் சப்ளை செய்த குஜராத் நபரை நாமக்கல் போலீசார் கைது செய்துள்ள நிலையில், குஜராத் கும்பல் குறித்த விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.