பால்ராஜ் pt desk
தமிழ்நாடு

சேலம் | ”கடன் தொல்லை தாங்க முடியல..” வெள்ளிப்பட்டறை உரிமையாளர் குடும்பத்துடன் எடுத்த விபரீத முடிவு!

சேலத்தில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர்: மோகன்ராஜ்

சேலம் அரிசிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வெள்ளிப்பட்டறை உரிமையாளர் பால்ராஜ், இவரது மனைவி ரேகா, மகள் ஜனனி ஆகியோர் சொந்த வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், பொழுது விடிந்து வெகுநேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் அழைப்பு மணியை அடித்தும், கதைவைத் தட்டியும் பார்த்துள்ளனர். ஆனால், யாரும் கதவைத் திறக்காத காரணத்தால் பள்ளப்பட்டி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

குடும்பத்துடன் விபரீத முடிவு

தகவலின் பேரில் நேரில் வந்த போலீசார் உள்பக்க தாழ்பாளை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது பால்ராஜ், மனைவி ரேகா மகள் ஜனனி ஆகிய மூவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து தடயங்களை பதிவு செய்த போலீசார் நான்கு பக்க கடிதம் ஒன்றை கைப்பற்றினர்.

பால்ராஜின் மனைவி ரேகா எழுதியிருந்த அந்தக் கடிதத்தில் பலரிடம் கடன் பெற்று திரும்ப செலுத்த முடியாத காரணத்தால் தற்கொலை முடிவை எடுத்ததாக எழுதி வைத்திருந்ததாக தெரிகிறது.

ஜனனி பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில், மகிழ்வோடு வாழ்ந்து வந்த குடும்பத்தினர் எடுத்த விபரீத முடிவு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து சடலங்களை கைப்பற்றிய போலீசார், தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பல கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tragedy

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.