செய்தியாளர்: ஆர்.ரவி
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட ஏழாவது வார்டு உப்போடை பகுதியில் வசிப்பவர் விவசாயி பழனிவேல். இவரது மனைவி கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் பழனிவேல், இரவு நேரத்தில் தனது விவசாய தோட்டத்தில் தங்கி விட்டு காலையில் வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், இன்று காலை தோட்டத்தில் இருந்து பழனிவேல் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சிடைந்த அவர், உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 3.5 லட்சம் ரொக்கம், 45 பவுன் நகை மற்றம் வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து ஆத்தூர் காவல் நிலையத்திற்கு பழனிவேல் தகவல் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் ஆத்தூர் நகர போலீசார், நிகழ்விடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து ஆத்தூர் டி.எஸ்.பி சதீஷ்குமார், நேரில் விசாரணை மேற்கொண்டார். வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்களையும் மர்ம நபர்கள் உடைத்துச் சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து சேலத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.