சைதை துரைசாமி
சைதை துரைசாமி புதிய தலைமுறை
தமிழ்நாடு

“நான் மனம் கலங்கமாட்டேன்; இன்னும் உறுதியோடும் வலிமையோடும் சேவையை பிரதானப்படுத்துவேன்”- சைதை துரைசாமி

webteam

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், மனிதநேயம் இலவச ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் நிறுவனருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, தனது நண்பருடன் இமாச்சலப் பிரதேசம் கஷாங் என்ற பகுதிக்கு சுற்றுலாவுக்காக சென்றிருந்தார். அப்போது கடந்த 4-ம் தேதி அவருக்கு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சட்லெஜ் ஆற்றில் விழுந்து உயிரிழந்தார். 8 நாட்களுக்குப் பிறகு நேற்று முன்தினம் அவரின் உடல் மீட்கப்பட்டது.

வெற்றி துரைசாமி விபத்து

இதையடுத்து தனி விமானம் மூலம் நேற்று சென்னை கொண்டுவரப்பட்ட அவரது உடல் நேற்று மாலை கண்ணம்மாபேட்டை மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து வெற்றி துரைசாமியின் தந்தை சைதை துரைசாமி அளித்த பேட்டியில்....

“என் அருமை மகன் வெற்றி நம்மை விட்டு பிரிந்தது விதியின் விபரீதமாக நான் நினைக்கிறேன். போகவே வேண்டாம் என்று சொன்னேன். நான் அப்படி அழுத்திச் சொன்னால் போகாமல் இருப்பவன், இது கடைசி என்று சொல்லி சென்றான். ஆனால் இதுவே கடைசி பயணமாக இருக்கும் என்று ஒரு நாளும் நான் நினைக்கவில்லை. என் மகனின் இந்த இறுதி நாளில் என்னோடு இருக்க, இந்தியா முழுவதும் அரசு உயர் பதவிகளில் பணிபுரியும் வாய்ப்பை பெற்ற என்னுடைய அனைத்து மகன்களும், மகள்களும் (மனிதநேய பயிற்சி மையத்தில் பயின்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள்) இங்கு வந்திருக்கிறார்கள்.

என்னுடைய ஒரு மகன் போனாலும் பக்கபலமாக என்னுடைய இந்த மகன்களும் மகள்களும் இருக்கிறார்கள் என்ற மனவலிமையோடு உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். சக மனிதனுக்காக வாழ வேண்டும். 259 சாதிகளில் 170 சாதியினரை அரசு பணியிலும், மீதியுள்ள 89 பிரிவுகளில் உள்ளவர்களை எல்லாம் அரசு பதவியிலும் அமர வைப்பதுதான் என்னுடைய ஒரே லட்சியம் என்று, எனது மகன் மரணத்தில் உறுதி எடுத்துக் கொள்கிறேன். அதை நோக்கி பயணம் செய்து, சக மனிதனுக்காக வாழ்ந்து என் மகனின் ஆன்மா சாந்தியடையும் வகையில் அந்தச்சேவையை செய்வேன்.

நான் மனம் கலங்க மாட்டேன். இத்தனை மகன்களை நான் பெற்றிருக்கிறேன். அவர்களெல்லாம் இருக்கிறார்கள். நான் இன்னும் உறுதியோடு வலிமையோடு சேவையை பிரதானப்படுத்தி என் வாழ்க்கையை அமைத்துக் கொள்வேன். என் மகனின் இறுதி நாளில் இதை சூளுரை கொண்டு பயணிக்கிறேன். நீங்கள் அன்பும் அக்கறையும் கொண்டு உங்கள் துக்கத்தை இரங்கலை தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.