“வாழ்க்கை என்பது நல்ல நண்பர்களுக்காக..!” - வெற்றி துரைசாமி மறைவுக்கு ஓடோடி வந்த அஜித்குமார்!

வெற்றி துரைசாமியின் மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி தெரிவித்துள்ளார் நடிகர் அஜித்குமார். எந்த நிகழ்விலும் பங்கேற்காத அஜித்குமார் வெற்றிதுரைசாமி மறைவுக்கு வந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
vetri duraisamy - ajith kumar
vetri duraisamy - ajith kumarX

சென்னையின் முன்னாள் மேயரும், மனிதநேயம் இலவச ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் நிறுவனருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் மரணம் சமீபத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

தன் நண்பருடன் இமாச்சலப் பிரதேசம் சென்ற வெற்றி துரைசாமி, அங்கு கஷாங் என்ற பகுதியில் நடந்த விபத்தில் சட்லெஜ் ஆற்றில் விழுந்து உயிரிழந்தார். முதலில் அவருடைய மரணம் உறுதிசெய்யப்படாத நிலையில், 8 நாட்கள் தேடுதலுக்கு பிறகு அவரின் இறந்த உடல் மீட்கப்பட்டது. மகன் வெற்றி துரைசாமி உடலை கண்டறிந்த ஸ்கூபா நீச்சல் வீரர்களுக்கு தந்தை சைதை துரைசாமி தரப்பிலிருந்து ரூ.1 கோடி வழங்கப்பட்டது.

வெற்றிதுரைசாமியின் மறைவுக்கு அரசியல் மற்றும் திரைத்துறை சார்ந்த பலரும் இரங்கலை தெரிவித்துவரும் நிலையில், எதற்கும் எங்கும் தலைக்காட்டாத நடிகர் அஜித்குமார் வெற்றிதுரைசாமியின் வீட்டிற்கு நேரில் வந்து அவருடைய பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

மறைந்த நடிகர் விஜயகாந்தின் மறைவுக்கு நேரில் வராமல் இரங்கலை மட்டும் தெரிவித்திருந்த நிலையில், வெற்றிதுரைசாமியின் மறைவுக்கு நேரில் அஜித்குமார் வந்திருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வருகை இருவரிடையேயான நட்பு குறித்து பேசுபொருளாக மாறியுள்ளது.

vetri duraisamy - ajith kumar
’இதெல்லாம் இவர் எடுத்த புகைப்படங்களா!’ - இயற்கையை அதிகமாய் நேசித்த வெற்றி துரைசாமி! வைரல் ஃபோட்டோஸ்!

வெற்றிதுரைசாமி மறைவுக்கு நேரில் வந்த அஜித்! ஆழமான நட்பு!

எதற்கும் வெளியில் வராமலும், எந்த நிகழ்வுகளிலும் பெரிய அளவில் பங்கேற்காமல் இருந்துவரும் நடிகர் அஜித்குமார் வெற்றிதுரைசாமியின் மறைவுக்கு எப்படி வந்தார் என்றால், அதற்கு இருக்கும் ஒரேயொரு காரணம் வெற்றிதுரைசாமிக்கும் அஜித்குமாருக்கும் இருந்த நட்பு மட்டுமே. சாகச விரும்பியாகவும், புகைப்பட கலைஞராகவும் தன்னை வெளிக்காட்டிக்கொள்ளும் நடிகர் அஜித்தை போன்றே வெற்றிதுரைசாமியும் அதன்மீது தீராத காதல் கொண்டவராக இருந்துள்ளார். இருவருக்கும் உண்டான நட்பு எப்படியிருந்தது என்றால் இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொள்ளும் அளவு நெருக்கமானவர்களாக இருந்துள்ளனர்.

கடந்த 2021ம் ஆண்டு வெற்றிதுரைசாமி நடிகர் அஜித்குமாருடன் சேர்ந்தெடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, “வாழ்க்கை என்பது நல்ல நண்பர்களுக்காகவும் சிறந்த சாகசங்களுக்காகவும் (Life is meant for good friends and great adventures)” என்று எழுதியிருந்தார். அதேபோல பைக் சாகச பயணம் சென்றிருந்த நடிகர் அஜித்குமாரை நிற்கவைத்து புகைப்படம் எடுத்து ”அலைந்து திரிபவர்” என்ற பதிவை பதிவிட்டிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் நடிகர் அஜித் பைக்கில் செல்லும் போது அவர் எடுத்த வீடியோவையும் சமூகவலைதளத்தில் பகிர்ந்திருந்தார் வெற்றிதுரைசாமி.

இந்நிலையில் தான் நண்பர் வெற்றி துரைசாமியின் மறைவுக்கு நேரில் வந்து குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார் நடிகர் அஜித்குமார். இந்த சூழலில் நண்பர் வெற்றிதுரைசாமியின் திருமணத்தில் பங்கேற்ற நடிகர் அஜித்குமாரின் புகைப்படம் மற்றும் வெற்றிதுரைசாமி அஜித்குமாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் அதிகம் இணையத்தில் பகிர்ந்துவருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com