புவியரசு - விஜய் Pt web
தமிழ்நாடு

சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் புவியரசு மறைவு.. முதல்வர் அறிவிப்பின்படி அரசு மரியாதை!!

முதல்வர் விஜயின் அறிவிப்பின் படி, சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டிருக்கிறது.

Premkumar S

கவிஞரும், சாகித்ய அகாதமி விருதுகள் பெற்றவருமான புவியரசு நேற்று காலமானார். அவருக்கு வயது 96. அவரின் மறைவுக்கு எழுத்தாளர்களும் வாசகர்களும் இரங்கல் தெரிவித்துவருகிறார்கள். அந்தவகையில் தான், முதல்வர் விஜய் வெளியிட்டிருந்த இரங்கல் குறிப்பில், ”கவிஞர் புவியரசு அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தமிழ் இலக்கிய உலகைச் சேர்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இலக்கியத் துறையில் திரு. புவியரசு அவர்களின் பங்களிப்பைப் போற்றி அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூரைச் சேர்ந்த கவிஞர் புவியரசு, முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றியவர். 1952ஆம் ஆண்டு தனது இலக்கியப் பயணத்தைத் தொடங்கியவர். முற்போக்குச் சிந்தனையாளரான இவர், எல்லைப் போராட்டங்களில் பங்கேற்றுச் சிறை சென்ற பெருமைக்குரியவர். கவிதை உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய 'வானம்பாடி' இலக்கிய இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் புவியரசுவும் ஒருவர்.

எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள புவியரசு, ஷேக்ஸ்பியர், கலீல் ஜிப்ரான், ஓஷோ, தஸ்தயேவ்ஸ்கி போன்ற உலக எழுத்தாளர்களின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். 'புரட்சிக்காரன்' என்ற மொழிபெயர்ப்பு நூலுக்கு 2007இல் மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதை புவியரசு பெற்றார். மேலும், 'கையொப்பம்' என்ற கவிதைத் தொகுப்புக்கு 2009 இல் கவிஞர் புவியரசு சாகித்ய அகாடமி விருது பெற்றார். இவர் மொழிபெயர்த்த தஸ்தயேவ்ஸ்கியின் ‘கரமசோவ் சகோதரர்கள்’, மிகெய்ல் நைமியின் ‘மிர்தாதின் புத்தகம்’, கலீல் ஜிப்ரானின் ‘முறிந்த சிறகுகள்’ போன்ற நூல்கள் தமிழ் இலக்கிய உலகில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திவருபவை என்பது குறிப்பிடத்தக்கது.