நர்க்கீஸ்கான் pt web
தமிழ்நாடு

‘கோயில் அறங்காவலர் குழுவில் இஸ்லாமியரா?’ வதந்தி பரப்பிய ஹெச்.ராஜா.. நர்க்கீஸ்கான் உதிர்த்த உண்மை!

பாபநாசம் அருகே கோவில் அறங்காவலர் குழு உறுப்பினராக இஸ்லாமியர் நியமிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட நர்க்கீஸ்கான் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

PT WEB

பாபநாசம் அருகே கோவில் அறங்காவலர் குழு உறுப்பினராக இஸ்லாமியர் நியமிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட நர்கீஸ்கான் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். இரண்டு நாட்களில் தன்னுடைய பிள்ளைகளுக்கு காதுகுத்து நிகழ்ச்சி வைத்துள்ள நிலையில் இது போன்ற தவறான தகவல் பரவி வருவதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ பிரசன்ன ராஜகோபால சுவாமி திருக்கோயில்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா நெடுந்தெரு ரெகுநாதபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் நர்க்கீஸ்கான் (44). இவரது மனைவி ரேணுகா (40) இவர்களுக்கு நித்தியஸ்ரீ (15), ராஜதுரை (13) என்ற இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். நர்க்கீஸ்கான் தந்தை தங்கராஜ் ஹெல்த் டிபார்ட்மெண்டில், மெடிக்கல் நர்சிங் அசிஸ்டன்ட்டாக, கரம்பக்குடியில் பணி செய்து, ஓய்வு பெற்று சுமார் ஆறு ஆண்டுகளாகிறது.

இந்நிலையில் நர்க்கீஸ்கான், ரெகுநாதபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பிரசன்ன ராஜகோபால சுவாமி திருக்கோயிலின் அறங்காவலர் குழு உறுப்பினராக பதவி ஏற்றார். இவருடைய பெயரை வைத்து இஸ்லாமியர் என்று நினைத்து, இஸ்லாமியருக்கு எப்படி அறங்காவலர் பதவி வழங்கலாம் என பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. தொடர்ந்து சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டன.

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவும் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் இது தொடர்பாக கருத்தினை பதிவிட்டு இருந்தார்.

அதில், “பெருமாள் கோவில் அறங்காவலராக இஸ்லாமியரை நியமித்த இந்து சமய அறநிலையத்துறை... இதுபோல் மசூதி பொறுப்புகளில் ஒரு இந்துவை தமிழக அரசு நியமிக்குமா? இது திட்டமிட்டு இந்து கோவில்களை அழிக்கும் முயற்சி..!!” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், தான் ஒரு இஸ்லாமியர் இல்லை எனவும், தான் பிறக்கும் போது பிரசவம் பார்த்த மருத்துவர் பெயரை தாயார் தமக்கு சூட்டியதாகவும் நர்க்கீஸ்கான் விளக்கமளித்துள்ளார். மேலும், தான் சிவபக்தர் கூட்டத்தை சார்ந்தவர் எனவும், முழுக்க முழுக்க தான் ஒரு இந்து மதத்தை சார்ந்தவர் எனவும் கூறி உள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக, நர்க்கீஸ்கான் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், தன்னைக்கு நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார். இது குறித்து அய்யம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி, உதவி ஆய்வாளர் மகரஜோதி ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்த நர்க்கீஸ்கான், “கடந்த 15 நாட்களுக்கு முன்பு இக்கோவிலின் அறங்காவலர் குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டேன். இதற்கிடையேதான் நான் ஒரு இஸ்லாமியர் என சமூக வலைதளங்களில் சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். எனது தாய்க்கு பிரசவம் பார்த்த மருத்துவரின் நினைவாக அவரது பெயரை என்னுடைய தந்தை எனக்கு சூட்டி இருக்கிறார். நான் இஸ்லாமியன் இல்லை.

என்னுடைய பிள்ளைகளுக்கு இன்னும் இரண்டு நாட்களில் காது குத்து நிகழ்ச்சி நடத்த உள்ள நிலையில், இது போன்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவுவதால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளேன்” என வேதனையுடன் தெரிவித்தார்.